Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரி அருகே கொடூரம்; பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: 3 ஆசிரியர்கள் போக்சோவில் கைது; கிராம மக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 65 மாணவர்கள், 75 மாணவிகள் என மொத்தம் 140 பேர் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 1 மாதமாக பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியை, நேற்று முன்தினம் மாலை அந்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று, மாணவி மற்றும் பெற்றோரிடம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என கேட்டுள்ளார்.  அப்போது அந்த மாணவியின் பெற்றோர், மகள் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், கருக்கலைப்பு செய்ததால் பள்ளிக்கு அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்தார். அப்போது, தனது கர்ப்பத்திற்கு காரணம், அதே பள்ளியில் ஆசிரியர்களாக உள்ள பாரூர் சின்னசாமி (57), மத்தூர் ஆறுமுகம் (48), வேலம்பட்டி பிரகாஷ் (37) ஆகியோர்தான் என்றும் அவர்கள் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வட்டார கல்வி அலுவலர் சுமதியிடம் தெரிவித்தார். அவர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில், குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் (சைல்டு லைன்) புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தினரும், சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்களின் புகாரின்படி பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் நேற்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்தது உறுதியானதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கைதான 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்களால் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். 3 ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர். கண்டிப்பாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.