கிருஷ்ணகிரி அருகே சினிமா பாணியில் பயங்கரம்; ஓடும் காரில் கணவனை கத்தியால் குத்திய மனைவி; அதே கத்தியை பிடுங்கி மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்: விசாரணையில் பரபரப்பு தகவல்
தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே குடும்பத்தகராறில் ஓடும் காரில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் பிரேமா (28). இவருக்கும், சின்னபேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன் எல்லப்பா (32) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு தனுஷ் (11), வெற்றி (8) ஆகிய மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். கணவன் -மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். லக்ஷயா தந்தை பராமரிப்பில் உள்ளார். பிரேமா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி எல்லப்பா மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரேமா புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில், இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரேமா அனைவரின் முன்னிலையிலும் கணவனை செருப்பால் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சமரசம் செய்ததன்பேரில், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வதாக காவல்நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக ஜோதிபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் பிரேமா கணவனுடன் தங்கியிருந்தார். மூத்த மகன் தனுசுக்கு வரும் 30ம் தேதி பிறந்தநாள் என்பதால் புத்தாடை வாங்கி நேற்று முன்தினம் இருவரும் கிருஷ்ணகிரிக்கு காரில் சென்று தனியார் பள்ளியில் படிக்கும் மகன்களை பார்த்து கொடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் கெலமங்கலம் அடுத்த கூலிசந்திரம் நான்குவழி சாலை அருகே வரும்போது ஓடும் காரில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரேமா காரில் இருந்த கத்தியை எடுத்து கணவனை குத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான எல்லப்பா, கத்தியை பிடுங்கி பிரேமாவை சரமாரியாக குத்தியுள்ளார். வயிறு, தொடை, முதுகு, கை பகுதியில் சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்த பிரேமா ஓடும் காரிலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.
தொடர்ந்து, பிரேமாவின் உடலை காரிலிருந்து தள்ளி விட்டு விட்டு மத்திகிரி காவல் நிலையத்திற்கு சென்று எல்லப்பா சரணடைந்தார். அங்கிருந்த போலீசாரிடம் மனைவியை கொலை செய்து விட்ட விபரத்தை தெரிவித்துள்ளார். உடனே, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் எல்லப்பாவை கைது செய்தனர். அவரது வலது கை ஆள்காட்டி விரல், உள்ளங்கை, வலது கால் பெருவிரலில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எல்லப்பா ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, பிரேமாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு எல்லப்பா அடிக்கடி தகராறு செய்து வந்தது தெரியவந்தது. சினிமா பாணியில் ஓடும் காரில் இருவரும் மாறி மாறி கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



