Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி பழனிசாமி நடத்திய கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், பி.பாலகிருஷ்ணரெட்டி புறக்கணித்தனர்: விரைவில் ராஜினாமா?

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் ஓசூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பாலக்கோடு அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இதனால் விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 6 அதிமுக எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தவெக சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் நிர்வாகிகள் ராஜினாமா செய்வது ஏன்? என்பது குறித்து கடந்த ஒருவாரமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக அனைத்து நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று திருச்சி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, முன்னாள் அதிமுக எம்பி பா.குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.

இன்று காலை கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் மாலை ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களிடம் தனித்தனியாக மாவட்டவாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டார். இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஓசூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்காமல் புறக்கணித்தார். இவர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர். இதனால், பாலகிருஷ்ணரெட்டி வகித்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியில் இருந்த இவர், எஸ்.பி.வேலுமணியுடன் இணைந்து எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். பாலகிருஷ்ணரெட்டி விரைவில் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. பாலகிருஷ்ண ரெட்டி 2026 சட்டமன்ற தேர்தலில் ஓசூர் தொகுதியில் 27,803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னர், 2016 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனிடையே, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் புறக்கணித்துள்ளார். இவர் அதிமுக ஆட்சியில் உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தவர்.