கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
சென்னை: மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி, கேரட் விலை உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் தக்காளி, கேரட் வரத்து குறைவு காரணமாகவும் அதன் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 60 வாகனங்களில் இருந்து 1,300 டன் தக்காளிகள் வருவது வழக்கம். வரத்து குறைவால் நேற்று காலை 38 வாகனத்தில் இருந்து 800 டன் தக்காளிகளே வந்தன. இதன் காரணமாக, ஒரு கிலோ தக்காளி ரூ.40ல் இருந்து ரூ.60க்கும், கேரட் ரூ.35ல் இருந்து ரூ70க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கும், கேரட் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.