கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் மண்டகப் படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, திருவீதியுலா நடந்தது.
9ம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் உற்சவர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலை 5:16 மணிக்கு மேல் 5:45 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மண்டக படிதாரர்களான வணிக வைசிய சங்கத்தின் சார்பில் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
இதில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் கருணாநிதி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வி தலைமையில், செயல் அலுவலர் வள்ளிநாயகம் (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
