சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரில், திருப்பூர் தமிழன்ஸ் கோவை கிங்ஸ் இடையேயான எலிமினேட்டர் ஆட்டம் மழை காரணமாக ரத்தான நிலையில், லீக் சுற்று புள்ளிப் பட்டியல் அடிப்படையில் 3வது இடம் பிடித்திருந்த கோவை கிங்ஸ் அணி குவாலிபயர்-2 போட்டியில் விளையாட தகுதி பெற்றது. நடப்பு டிஎன்பிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் மதுரை பேந்தர்ஸ் (10), திருச்சி கிராண்ட் சோழாஸ் (10), கோவை கிங்ஸ் (8), திருப்பூர் தமிழன்ஸ் (8) அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன. மதுரை திருச்சி இடையே நேற்று முன்தினம் நடந்த குவாலிபயர்-1 போட்டி மழையால் ரத்தானதை அடுத்து, மொத்த ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த மதுரை பேந்தர்ஸ் நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.
கோவை-திருப்பூர் இடையே நேற்று நடைபெற்ற எலிமினேட்டரில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பந்துவீசியது. திருப்பூர் தமிழன்ஸ் 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், முடிவு இல்லாத போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, மொத்த ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த கோவை கிங்ஸ் குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது. சென்னையில் நாளை நடைபெற உள்ள அந்த போட்டியில் திருச்சி-கோவை அணிகள் மோதும். அதில் வெற்றி பெறும் அணி ஆக.28ம் தேதி பைனலில் மதுரை பேந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.



