Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

85 ரன் வித்தியாசத்தில் டிராகன்சை வீழ்த்தியது கோவை கிங்ஸ்: கேப்டன் ஷாருக் அதிரடி

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதிய கோவை கிங்ஸ் அணி 85 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ராதாகிருஷ்ணன், சுரேஷ் லோகேஷ்வர் இனைந்து கோவை கிங்ஸ் இன்னிங்சை தொடங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 60 ரன் சேர்த்தது. ராதாகிருஷ்ணன் 24 ரன், லோகேஷ்வர் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆந்த்ரே சித்தார்த் 7 ரன்னில் வெளியேறினார். மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். பாலசுப்ரமணியன் சச்சின் கேப்டன் ஷாருக் கான் இணைந்து 4வது விக்கெட்டுக்கு பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, கோவை கிங்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது.

பாலசுப்ரமணியன் 30 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாருக் கான் 59 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, டிஎல்எஸ் விதிப்படி 16 ஓவரில் 179 ரன் எடுத்தால் வெற்றி என மாற்றியமைக்கப்பட்ட இலக்குடன் களமிறங்கிய டிராகன்ஸ் 13.2 ஓவரிலேயே 93 ரன்னுக்கு சுருண்டு 85 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கருப்பசாமி 19, அதுல் விட்கர் 17, மோகித் மிட்டன் 13, கிரிஷ் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். கோவை பந்துவீச்சில் ஜாதவேத் சுப்ரமணியன் 4, மணிமாறன் 2, லிங்கேஷ், ஷாருக் கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கோவை கிங்ஸ் 2 புள்ளிகள் பெற்றது.