சென்னை: மதுரை பேந்தர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியில், ஆந்த்ரே சித்தார்த் அதிரடி ஆட்டத்தால் கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ராதாகிருஷ்ணன், சுரேஷ் லோகேஷ்வர் இணைந்து கோவை இன்னிங்சை தொடங்கினர். சுரேஷ் 11, ராதாகிருஷ்ணன் 13 ரன் எடுத்தடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கோவை 3.1 ஓவரில் 34 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், பாலசுப்ரமணியன் - ஆந்த்ரே சித்தார்த் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய சித்தார்த் 34 பந்தில் அரை சதம் அடித்தார். பாலசுப்ரமணியன் 39 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாருக் கான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சித்தார்த் 82 ரன் விளாசி (47 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) சரவணன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராம் குமாரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அம்ப்ரிஷ் 6, தீபன் லிங்கேஷ் 1 ரன்னில் வெளியேறினர்.
20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.மாதவ பிரசாத் 13 ரன், கிஷோர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதுரை பேந்தர்ஸ் பந்துவீச்சில் சரவணன் 4 ஓவரில் 30 ரன்னுக்கு 4 விக்கெட், குர்ஜப்னீத் சிங், சோயிப் முகமது கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது.



