கோத்தகிரியில் விதிமீறி வாகனம் ஓட்டிய உரிமையாளர்களுக்கு அபராதம்
*2வது கியரில் செல்ல அறிவுரை
கோத்தகிரி : கோத்தகிரியில் விதி மீறி வாகனம் ஓட்டிய உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மலைப்பாதையில் 2வது கியரில் செல்ல அறிவுரை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள், சந்திப்புகளில் போக்குவரத்து காவல்துறையினர் நீலகிரி எஸ்பி நிஷா அறிவுறுத்தலின்படி கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தீவிர வாகன சோதைனையில் ஈடுபட்டனர்.
டானிங்டன், கட்டபெட்டு, சக்கத்தா மாரியம்மன் கோவில், கன்னிமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.
மது அருந்தி வாகனங்களை இயக்குவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, பின்னால் அமர்ந்தவரும் ஹெல்மெட் அணியாமல் செல்வது. அதிவேகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதில், கடந்த ஒரு வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி வாகனங்களின் ஓட்நர்கள் உரிமம், தரச்சான்று ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.
மலைப்பாதையில் இரண்டாவது கியரில் வாகனங்களை இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி குறைவான வேகத்தில் செல்லவும், வாகனங்களை முந்த கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த சோதனையின் போது கோத்தகிரி சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், காவலர் பரத் உள்ளிட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.