Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடு ஆந்திரா சென்றது: முதலீடுகளை தக்கவைக்க தவறிய தவெக அரசு

சென்னை: ஹூண்டாய், கியா ஆகிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வாகன உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் தென்கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின், சியோயான், இவாமெட் ஆகிய நிறுவனங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளன. 1,418 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதன் மூலம் இது, ஏற்கனவே தமிழகத்தில் தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்களின் புதிய முதலீடுகளைக்கூட தக்கவைக்க முடியாத தமிழக அரசின் தொழில் முதலீட்டு கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஏராளமான முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. இதை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. தொழிற்சாலை அமையும் இடங்களுக்கு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டன. குறிப்பாக, பரந்தூர் விமான நிலையம் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்ததாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பெருமளவு பணிகள் முடிந்த நிலையில், அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இது தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பரந்தூர் திட்டத்தை கைவிடுவதாக தவெக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானபோதே தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் வேறு மாநிலத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகுதான், ஆந்திராவில் முதலீடு செய்ய மூன்று கொரிய நிறுவனங்கள் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின், சியோயான், இவாமெட் ஆகிய முன்னணி நிறுவனங்கள், ஹூண்டாய், கியா ஆகிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வாகன உதிரிபாகங்கள் சப்ளை செய்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதில் ஹ்வாஷின் நிறுவனம் ரூ.850 கோடியும், சியோயான் நிறுவனம் ரூ.514 கோடியும், இவாமெட் நிறுவனம் ரூ.250 கோடியும் முதலீடு செய்ய உள்ளன. ஹ்வாஷின் நிறுவனம் மூலம் 100 பேருக்கும், சியோயான் நிறுவனம் 918 பேருக்கும், இவாமெட் நிறுவனம் மூலம் 400 என மொத்தம் 1,418 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீடுகளை உறுதி செய்வதற்காக ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கடந்த ஜூலை மாதம் தென்கொரியா சென்று ஹூண்டாய், கியா நிறுவனங்களின் உதிரிபாக விநியோக சங்கிலியில் உள்ள நிறுவனங்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து ஆந்திர பொருளாதார மேம்பாட்டு வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நிறுவனங்களின் முதலீடுகளையும் உறுதி செய்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே தமிழகத்தில் தொழில் முதலீட செய்துள்ளன. ஹ்வாஷின் நிறுவனம் பெரும்புதூரிலும், சியோயான் நிறுவனம் கிருஷ்ணகிரியிலும் தொழிற்சாலைகளை கொண்டுள்ளன. இவாமெட் நிறுவனமும் தமிழகத்தில் தனது நிறுவனத்தை பதிவு செய்திருந்தது.

தமிழகத்தில் தொழிற்சாலைகளை விரிவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், தற்போது புதிய முதலீடுகளுக்கு ஆந்திராவை தேர்வு செய்துள்ளன. தென்கொரிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தனியாக ‘கொரியா டெஸ்க்’ தொடங்கியது. கொரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கவும் இந்த பிரிவு உதவும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே செயல்படும் மூன்று நிறுவனங்களின் ரூ.1,614 கோடி முதலீட்டு வாய்ப்புகளை தக்கவைக்க முடியவில்லை.

இதற்கிடையே, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென்கொரியா சென்று மோட்டிவ்லிங்க் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக ரூ.300 கோடி முதலீட்டில் மின்சார வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மூன்று நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் 1,418 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும். மேலும், உதிரிபாக உற்பத்தி செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து, ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு சார்பு தொழில்களும் வளர்ச்சி அடைந்திருக்கும். தற்போது இந்த வாய்ப்புகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன.

தமிழகம் நீண்டகாலமாக நாட்டின் முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இருந்து வருகிறது. இத்தகைய வலுவான தொழில் கட்டமைப்பு இருந்தும், ஏற்கனவே தமிழகத்தில் செயல்படும் நிறுவனங்களின் விரிவாக்க முதலீடுகளைக்கூட தக்கவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டுப் பயணங்கள், தனி முதலீட்டு மையங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை அறிவிக்கும் தமிழக அரசு, நிறுவனங்களின் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான நிதி ஆயோக் அறிக்கையில் ஒட்டு மொத்த அளவில் டாப் 5 மாநிலங்களிலும், பெரிய மாநிலங்களில் டாப் 5 மாநிலங்களிலும் 3வது இடத்தை தமிழ்நாடு பிடித்தது. உள்கட்டமைப்பு, வணிக சூழல், வளங்கள், அரசு கொள்கைகள், ஒழுங்குமுறை எளிமை, நிறுவன சூழல், நிதி நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மீள் திறன் என அனைத்தும் தேசிய சராசரிக்கும் மேல் இருந்தது முதலீடுகளை ஈர்க்க காரணமாக அமைந்தது. இதனால் வடமாநிலங்களுடனான இடைவெளியும் குறைந்து விட்டது. உள்கட்டமைப்பில் நம்பர் ஒன் மாநிலம் என்ற அந்தஸ்தை பிடித்தது.

தற்போதைய தவெக அரசின் சில முடிவுகள், நிலைப்பாடுகள் காரணமாக, இந்த நம்பர் ஒன் அந்தஸ்து தக்கவைக்கப்படுமா என்ற கேள்விகள் பலரால் முன்வைக்கப்பட்டன. ஆந்திரா முதலீடுகளை அசுர வேகத்தில் ஈர்க்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை கொண்டுவர விமான நிலைய மேம்பாடு மிகவும் அவசியம். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால், சென்னை விமான நிலையத்தில் இப்போதுள்ள நெருக்கடி மேலும் அதிகமாகும். உள்ளூர் விமானங்கள் சில ரத்தாவது போல் சர்வதேச விமான போக்குவரத்து இணைப்பும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், மின்னணு, சுற்றுலா, உற்பத்தித்துறை முதலீடுகள் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதலீடுக்கு சாதகமான சூழல் மாறிவிடும். இங்கு வர வேண்டிய முதலீடுகள் பெங்களூரு, ஐதராபாத், விசாகபட்டினத்துக்கு மாறக்கூடும் இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆந்திராவுக்கு சென்றுள்ள 3 நிறுவனங்களின் முக்கிய முதலீடுகள் விமான நிலைய விரிவாக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

  • திமுக ஆட்சிக்காலத்தில் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருந்தது. இது முதலீடுகளை ஈர்க்க காரணமாக அமைந்தது.
  •  தவெக ஆட்சி அமைந்த பிறகு பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதால் முதலீடுகள் ஆந்திரா செல்ல துவங்கின.
  • இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது 3 தென் ெகாரிய நிறுவனங்களின் ரூ.1,614 கோடி முதலீடு ஆந்திரா சென்றுள்ளது.