Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது; கூட்டாளிகள் 4 பேருக்கு வலை

ஆவடி: கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கூட்டாளிகளான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவர், கடந்த வருடம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரில், எனக்கு சொந்தமாக கொரட்டூர் மதனாங்குப்பம் பாரத்நகரில் 1891 சதுர அடி நிலத்தை கிரையம் பெற்று அனுபவித்து வந்தேன். பின்னர், இந்த இடத்திற்கு பட்டா பெற்று தருவதாக புரோக்கர்கள் பிரபு, பக்கிரிசாமி, ரவி ஆகியோர் என்னிடம் நில பத்திர ஜெராக்ஸ் கேட்டனர். நீண்ட நாட்களாகியும் பட்டா பெற்று தரவில்லை. இதனால் வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்தபோது, எனது பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வேறு போட்டோ ஒட்டி போலி ஆதார் அட்டை தயார் செய்து திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பக்கிரிசாமிக்கு பொது அதிகார பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

பொது அதிகார பத்திரத்தில் பிரபு மற்றும் ரவி ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர். போலி பத்திரத்தை வைத்து கிருஷ்ணகுமார் மற்றும் சுப்ரஜா ஆகியோரிடம் ரூ.40 லட்சம் பெற்றுகொண்டு கிரைய பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சம். எனவே, ஆள்மாறாட்டம் செய்து என்னுடைய நிலத்தை அபகரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீட்டு தரவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவின்பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் செந்தில்குமார், கூடுதல் காவல் துணை ஆணையாளர் ஸ்டீபன் மற்றும் காவல் உதவி ஆணையாளர் கோவிந்த் மேற்பார்வையில், ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்த 7 பேர் கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு, மெய்யூர் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். தலைமறைவான சுரேஷ், கிருஷ்ணகுமார், சுப்புராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பக்கிரிசாமி இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.