Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொல்கத்தாவில் நாளை மறுநாள் முதல் போட்டி தொடக்கம்: இந்திய மண்ணில் டெஸ்ட்டில் தென்ஆப்ரிக்கா சாதித்தது என்ன?: 7 தொடர்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது

கொல்கத்தா: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒன்டே மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளைமறுநாள் தொடங்க உள்ளது. இந்தபோட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் தென்ஆப்ரிக்க அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் சாதித்தவை பற்றி பார்க்கலாம்.

தென்ஆப்ரிக்க அணி 1996-97ம் ஆண்டு முதன் முறையாக இந்தியாவில் டெஸ்ட்தொடரில் ஆடியது. 3 போட்டி கொண்ட தொடரை டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட், மற்றும் கான்பூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2 டெஸ்ட்டில் தென்ஆப்ரிக்கா 329 ரன் வித்தியாசத்தில் வென்றது.

1999-2000ம் ஆண்டில் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் வான்கடேவில் நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூருவில் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்த படுதோல்வியால் இந்திய அணி கேப்டன் டெண்டுல்கர் பதவியை ராஜினாமா செய்தார்.

2004-05ம் ஆண்டில் 2 போட்டி கொண்ட தொடரில் முதல் போட்டி டிராவில் முடிய 2வது போட்டியில் கங்குலி தலைமையிலான இந்தியா வெற்றி பெற்று 1-0 என தொடரை கைப்பற்றியது.

2007-08ம் ஆண்டில் 3 போட்டி கொண்ட தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிய அகமதாபாத்தில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்கா 90 ரன் வித்தியாசத்தில் வென்றது. கான்பூரில் நடந்த 3வது போட்டியில் டோனி தலைமையிலான இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் 1-1 என சமனில் முடிந்தது.

2009-10ம் ஆண்டில் 2 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்ற தென்ஆப்ரிக்கா நாக்பூரில் நடந்த போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 57 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டோனி தலைமையிலான இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்தது.

2015- 16ம் ஆண்டு பிரீடம் டிராபியில் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா ஆடியது. இதில் கோஹ்லி தலைமையிலான இந்தியா மெகாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் 108 ரன் வித்தியாசத்தில் வென்ற நிலையில் பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. நாக்பூரில் நடந்த 3வது போட்டியில் 124 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 4வது போட்டியில் 337 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது.

கடைசியாக 2019-20ல் 3 டெஸ்ட் கொண்ட பிரீடம்டிராவில் தென்ஆப்ரிக்கா ஆடியது. இதில் கோஹ்லி தலைமையிலான இந்தியா விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2வது போட்டியில் 137 ரன் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட்டில் 202 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்ற 3-0 என தொடரை கைப்பற்றியது. இதுவரை 7 தொடரில் ஆடி உள்ள தென்ஆப்ரிக்கா ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. இந்த முறை கில் தலைமையில் களம் இறங்கும் இந்தியா தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.