கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 159 ரன்னுக்குள் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழந்து 37 ரன் எடுத்திருந்தது.
இந்தியா வந்துள்ள, டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், கொல்கத்தா நகரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்கள் அய்டன் மார்க்ரம் 31, ரையான் ரிக்கெல்டன் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த கேப்டன் டெம்பா பவுமா 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின் வந்தோர் யாரும் சிறப்பாக ஆடாமல் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், தென் ஆப்ரிக்கா அணி, 55 ஓவரில் 159 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 2, அக்சர் படேல் 1 விக்கெட் எடுத்தனர். பின், முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா, ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழந்து 37 ரன் எடுத்திருந்தது. இந்தியா 122 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
16வது முறையாக பும்ராவுக்கு 5 விக்கெட்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று, இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 14 ஓவர்கள் வீசி 27 ரன் மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 16வது முறையாக பும்ரா, 5 விக்கெட் சாதனையை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா 4 முறையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 முறையும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும், இலங்கைக்கு எதிராக ஒரு முறையும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
