Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொடிவேரி அணையில் குவிந்த 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

கோபி : கொடிவேரி அணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவி போல் கொட்டும் தண்ணீரில் அணையை விட்டு வெளியேற மனமில்லாமல் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.வெறும் 5 ரூபாயில் ஒரு முழு விடுமுறையையும் உற்சாகமாக களிக்க முடியும் என்றால் அது கொடிவேரி அணையில் மட்டுமே. கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.

சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கும் கோடை வெயில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே வருகிறது.

இதனால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொடிவேரி அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டியதால் இங்கு வருகை தந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அணையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதனால் அருவியில் குளிக்க இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர் அதே போன்று சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் பெண்களும் உற்சாகமாக விளையாடியும், கடற்கரை போன்ற மணல் பரப்பில் அமர்ந்தும் விடுமுறையை களித்தனர். அதே போன்று அணையின் மேல் பகுதியில் குடும்பம் குடும்பமாக பரிசல் பயணம் செய்தும் உற்சாகமாக விடுமுறையை களித்தனர்.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடிவேரி அணையில் தஞ்சம் புகுந்த சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் இருந்து வெளியேற மனமில்லாமல் உற்சாகத்துடன் விடுமுறையை களித்தனர்.

லைப் ஜாக்கெட் கட்டாயம்

அணையில் பரிசல் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என பொதுப்பணித்துறையினர், பரிசல் ஓட்டிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். கடந்த வாரம் வரை உத்தரவை மதிக்காமல் இருந்ததால் ஒரு வாரம் பரிசல் இயக்க தடை விதித்தனர்.

இந்நிலையில் நேற்று அனைத்து பரிசல்களிலும் சுற்றுலா பயணிகள் லைப் ஜாக்கெட் அணிந்த பின்பே பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் பொதுப்பணித்துறையினர் காட்டும் கட்டாய உத்தரவை சுற்றுலா பயணிகள் வரவேற்றுள்ளனர்.