கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி தான் ஏ1 குற்றவாளி: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி, துரோகத்துக்கான நோபல் பரிசை பழனிசாமிக்கே கொடுக்க வேண்டும் என்றும் கடும் தாக்கு
கோபி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 குற்றவாளி என்று செங்கோட்டையன் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். மேலும், துரோகத்துக்கான நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிக்கே கொடுக்க வேண்டும் என்று கடுமையாகயும் தாக்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். எடப்பாடி சந்தித்த 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 5ம் தேதி செங்கோட்டையன் பேட்டி அளித்தார். இதற்காக எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். ஆனால் மறுநாளே கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக செங்கோட்டையனை அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
அவரது ஆதரவாளர்கள் பலரது கட்சி பதவியை பறித்ததோடு, 2 பேரை கட்சியிலிருந்தே டிஸ்மிஸ் செய்து அதிர்ச்சி அளித்தார். அதேசமயம் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியினரும், டிடிவி.தினகரனின் அமமுக கட்சியினரும், சசிகலா ஆதரவாளர்களும் ஆதரவுக்குரல் கொடுத்து வந்தனர். இதையடுத்து, ‘‘என்னிடம் விளக்கம் கேட்காமல் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அந்த முயற்சி தொடரும்’’ என்று செங்கோட்டையன் கூறி வந்தார்.
டெல்லிக்கு சென்ற அவர் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையனின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே இருந்து வந்தது. நேற்று முன்தினம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்தார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் சேர்ந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் சசிகலாவையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இதனால் செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் கேட்டபோது, கோபியில் நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேசுவதாக கூறினார்.
அவரது விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக கோபியில் உள்ள கே.ஏ.செங்கோட்டையன் இல்லத்திற்கு அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை குவிந்தனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், கோபி, அந்தியூர் பகுதி நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தொண்டர் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் அங்கு வந்தனர். இந்நிலையில் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 1972ல் அதிமுகவில் எம்ஜிஆரின் புனித பயணத்தில் உறுப்பினராக மட்டுமன்றி செயலாளராக இருந்து பணியாற்றியவன்.
எம்ஜிஆரோடு பயணத்தை மேற்கொள்ளும்போது 1975ல் கோவையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு நடைபெற்றபோது, அதில் அரங்கநாயகம், மணிமாறன் ஆகியோரோடு சேர்ந்து பொதுக்குழு நடத்தும் வாய்ப்பை எனக்கு எம்ஜிஆர் வழங்கினார். சிறப்பான முறையில் பொதுக்குழுவை நடத்தி எம்ஜிஆரின் பாராட்டுக்களை, கே.ஏ.கே மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் அருகில் இருந்தபோது பாராட்டை பெற்றவன் நான் என்பதை முதலில் நினைவூட்ட விரும்புகிறேன்.
அதற்குப் பின் ஜெயலலிதாவின் வழியில் இந்த இயக்கத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா விரல் காட்டும் திசை நோக்கி என் பயணங்களை சிறந்த முறையில் தடம் புரளாமல், சலனத்திற்கு இடமளிக்காமல் என் பணியை ஆற்றி இருக்கிறேன் . அதை ஜெயலலிதா அவர்களே திருச்சியிலும் எனது குடும்ப திருமணத்திலும் சொல்லி இருக்கிறார்.
இமயமே தன் தலையில் விழுகிறது என்றாலும் சறுக்காமல், வழுக்காமல் இயக்கத்திற்கு விசுவாசம் உள்ள தொண்டனாக இருக்கின்ற காரணத்தின் அடிப்படையில் தான் இத்தனை பொறுப்புகளை அவருக்கு வழங்கி இருக்கிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, இந்த இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோருடனும் சேர்ந்து என்னுடைய பணிகளை அயராது ஆற்றி இருக்கிறேன்.
அப்படி பணியாற்றிய பிறகு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, இந்த இயக்கம் உடைந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இரண்டு முறை எனக்கு வாய்ப்புகள் கிடைத்தபோதும், அந்த வாய்ப்பை, இந்த இயக்கம் சிறிதளவும் தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தான் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்து இருக்கிறேன் என்பதை நாடறியும்.
அப்படிப்பட்ட நிலையில் இன்று அதிமுகவில் நம்முடைய பணிகளை நாங்கள் ஆற்றிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கழக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 2019 மற்றும் 2021, மாநகரம், பேரூராட்சி, நகராட்சி தேர்தல் மற்றும் 2024 தேர்தல்களில் அவர் எடுத்த முடிவின் காரணமாக பல்வேறு சோதனையின் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்த நிலையையும் நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நான்காண்டு காலம் இந்த இயக்கத்தை வழி நடத்துவதற்காக அன்று சசிகலா அனைவரையும் அழைத்து பேசி, கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
எல்லோருடைய கருத்துக்களையும் என்னிடம் பகிர்ந்து, அவர் என்னிடம் ஒரு மணி நேரம் பேசிய பிறகு நான் அவரிடம் கூறிய ஒரே கருத்து, 122 எம்எல்ஏக்களும் சேர்ந்து இருக்கவேண்டும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கான பரிந்துரை கடிதத்தை அனைவரிடமும் ஒப்புதல் பெற்று அதனை நானே வெளியிட்டேன். அதன் பிறகு நான்காண்டு காலம் ஆட்சியை நடத்தினோம். அதன் பிறகு இவர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை அதிமுக எட்ட முடியவில்லை.
2024க்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களையும், மன வேதனையோடு கட்சி பணிகளை ஆற்றாமல், துயரத்தோடு இருப்பவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 6 பேர் சென்று எடப்பாடி பழனிசாமியிடம் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திய பிறகு தொடர்ந்து 4 வார காலம் 6 பேர் சந்தித்தார்கள், கருத்துகளை சொன்னார்கள், அந்த கருத்துகள் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்கு பிறகு தான் செய்தியாளர்களை சந்திக்கும்போது, யாருமே என்னை பார்க்கவில்லை. இது பச்சைபொய் என்று பழனிசாமி தெரிவித்தார். பல கோடி தொண்டர்களின் எண்ணங்களைத்தான் நாங்கள் பிரதிபலித்தோம். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என மக்கள் நினைக்கின்றனர். சோர்வோடு இருக்கும் தொண்டர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். இதுதான் தொண்டர்களின் உணர்வு. இதனை உணர்ந்து கொண்டு கடந்த 5ம் தேதி எனது கருத்தை தெரிவித்தேன்.
அதற்கு முன்னதாகவே இரண்டு முறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, எனது கருத்தை தெரிவித்தேன். சிலபேர் என்னுடன் வந்தார்கள், அவர்கள் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர், இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், நான் மனம் திறந்து எனது கருத்துக்களை வெளியிட்டேன். வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த கருத்துக்களை பரிமாறினோம். 10 நாட்களில் பேச்சு தொடங்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், நான் கெடு விதிக்கவில்லை.
பத்து நாட்களுக்குள் பேச்சை துவங்கி ஒன்றரை மாதத்திற்குள் யார்? யாரை சேர்க்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்ய வேண்டும் என கூறி இருந்தேன். ஆனால், பத்து நாள் கெடு விதித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பணியை மேற்கொண்டேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தோம். 10 தொகுதிகளில் 3வது இடம், இரு தொகுதிகளில் 4வது இடம். இதனால், என்னை பொருத்த வரை நேற்று முன்தினம் தேவர் ஜெயந்திக்கு செல்லும்போது, அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அனைவரையும் சந்தித்து பேசினேன்.
அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் பணியை செய்தேன். தேவர் பெருமகனாருக்கு மரியாதை செலுத்தியதற்கு பரிசாக என்னை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்திருக்கின்றனர். திமுகவின் `பி’ டீம் ஆக நான் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். பி.டீம் யார்? என்பதை நாடறியும். இந்த இயக்கத்தை வளர்த்த ஜெயலலிதா வீட்டில் மூன்று, நான்கு கொலைகள், கொள்ளை நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில் ஏன் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக்கவில்லை? நான் பி.டீமில் இல்லை. அவர் ஏ-1ல் இருக்கிறார்.
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நான் துரோகம் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்ட சண்முகவேலின் மகன் ஆதாரங்களை வெளியிட இருக்கிறார். 1989ல் நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது 11 சட்டமன்ற தொகுதி இருக்கும்போது சேவல் சின்னத்தில் வெற்றிபெற்ற தொகுதி அந்தியூர் தொகுதி என்பதை மறந்து விடக்கூடாது. என்னை குற்றம் சாட்டுவதற்கு முன்பாக குற்றம் செய்தவர் யார்?, அதற்கு உறுதுணையாக இருந்தவர் யார்? என்பதை தெரிந்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்க வேண்டும்.
அதனை விட்டுவிட்டு குற்றம் செய்தவர்களுக்கு பதவியை கொடுத்து, தன்னோடு வைத்திருக்கிறார். எம்ஜிஆர் ஊழல் செய்து உள்ளதாக ஆளுநரிடம் எஸ்.டி.எஸ் குற்றம் சாட்டிய போதும், அவரது வீட்டிற்கே சென்று, வாருங்கள் அண்ணா, என்னை அரவணைத்து செல்லுங்கள் என்று அழைத்துச்சென்றவர் எம்ஜிஆர். காளிமுத்து, வளர்மதி என்ன விமர்சனம் செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்.
எவ்வளவு கேவலமான வார்த்தைகளை ஜெயலலிதாவிடம் பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதன் பிறகும் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லையா? அந்த அங்கீகாரம் கொடுத்த காரணத்திற்காக தான் அந்த இரு தெய்வங்களும் நம்மை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
* எடப்பாடி நீக்கியவர் பட்டியலில் 14வது இடம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவிஏற்றபிறகு அவரால் நீக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலில் 14வது இடத்தை பிடித்துள்ளார் செங்கோட்டையன். இதற்கு முன்னர், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர்ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* தோற்கடிக்க கைமாறிய பணம், செல்போன் ஆடியோவில் திடுக்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜாவும், ராயனும் பேசிக்கொண்ட பதிவுகள் ஆடியோவில் இடம்பெற்றுள்ளன. அதில், கைக்கு வந்துவிட்டதா? என பணத்தை குறிப்பிடாமல் கேட்கிறார். “நான் சொன்னதை சரியாக ஃபாலோ செய்துகொள். கோட்டை விட்டுவிட்டு, வந்து நிற்காதே... நிர்வாகிகளிடம் (பணத்தை) கொடுத்துவிட்டு, யாருக்கும் தர வேண்டாம் என சொல்... பிறகு கொடுக்கலாம் என சொல்லி நிறுத்தி விடு... அவர்கள் உனக்கு கும்பிடு போடுவார்கள். சரியாக செய்து விடு, எல்லா பக்கமும் இதுதான் நடக்கிறது..’’ என பதிவாகி உள்ளது.
* அந்தியூர் தொகுதியில் தோல்விக்கு யார் காரணம்?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைவதற்கு செங்கோட்டையன்தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு, கோபியில் நேற்று செங்கோட்டையன் பேட்டி அளித்தபோது மறுப்பு தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் அந்தியூரில் போட்டியிட்ட சண்முகவேல், அவரது மகன் மோகன்குமார் மற்றும் பர்கூர் ஒன்றிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராயன் ஆகியோர் மறுப்பு தெரிவித்து பேட்டியளித்தனர்.
அத்துடன், முன்னாள் எம்எல்ஏ இ.எம்.ஆர்.ராஜா, தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டனர். இதன்பின்னர், அதிமுக வேட்பாளர் சண்முகவேலின் மகன் மோகன்குமார் கூறுகையில், ‘அந்தியூர் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் 1,275 வாக்குகள் வித்தியாசத்தில் எனது தந்தை தோல்வி அடைந்தார். முன்னாள் எம்எல்ஏ இ.எம்.ஆர்.ராஜா எனது தந்தையை தோற்கடிக்க வேண்டும் என பல நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு பேசினார்.
பல விசுவாசமிக்க நிர்வாகிகள் இ.எம்.ஆர்.ராஜா பேசியதை பதிவுசெய்து, கட்சியின் தலைமைக்கு அனுப்பினர். ஒரு சில நிர்வாகிகள் அவருடன் இணைந்து துரோக செயலில் ஈடுபட்டனர். அவர் கட்சிக்கு துரோகம் செய்த காரணத்தால் அதிமுக தோல்வி அடைந்தது. முக்கிய காரணம் இதுதான். இது, அந்தியூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் தெரியும்.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்தது மட்டுமின்றி, இத்தொகுதியில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து, இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக செயல்பட்ட இ.எம்.ஆர்.ராஜாவை மாநில பதவியில் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இது, அதிமுக தொண்டர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
* ‘நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்துகிறேன்’
‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் மன வேதனை அடைகிறேன், கண்ணீர் சிந்துகிறேன். வருத்தப்படுகின்றேன். இந்த இயக்கத்திற்காக 53 ஆண்டுகள் என்னை அர்ப்பணித்தவன். எம்ஜிஆர் காலத்தில் செயலாளராக 1972ல் இருந்து செயல்பட்ட எனக்கு இப்படிப்பட்ட தீர்ப்பு மன வேதனையை அளிக்கிறது. இரவு முழுவதும் தூங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே எம்ஜிஆர் மூலம் சட்டமன்ற உறுப்பினராக, மாவட்ட செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவன். 1989ல்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இடம்பெறுகிறார்.
அவர் எனக்கு ஒரு நோட்டீஸ் ஆவது அளித்திருக்க வேண்டும். ஒரு கடிதத்தை அனுப்பி பதில் கேட்டிருக்க வேண்டும். இதுதான் கட்சியின் விதி. அந்த விதியை மீறி சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் தூக்கலாம் என செயல்படுகிறார். இது வேதனை அளிக்கிறது. 1975ம் ஆண்டு எம்ஜிஆர் கொண்டு வந்திருக்கக்கூடிய கட்சியின் விதிப்படி தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது தெளிவாக 43வது பேராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்ததற்காக என் மீது களங்கம் ஏற்படுத்தி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது வருத்தத்தை தருகிறது.’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
* ‘4 ஆண்டுகள் காப்பாற்றிய பாஜவுக்கு என்ன செய்தோம்’
செங்கோட்டையன் கூறுகையில், ‘எடப்பாடி பழனிசாமி எப்படி பதவியை பெற்றார் என்பதை நாடு அறியும். இந்த இயக்கத்தை நான்காண்டு காலம் காப்பாற்றிய பாஜவிற்கு என்ன செய்தோம். 2024 மட்டுமல்ல 2026, 2029லும் கூட்டணி இல்லை என்று சொன்னவர் எடப்பாடி என்பதை மறந்து விடக்கூடாது. 2024ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தடுமாற்றத்தை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சை எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கிறார்’ என்றார்.
* எடப்பாடி பழனிசாமி படம் அகற்றம்
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலக பேனரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களுடன், செங்கோட்டையன் படமும் இருந்தது. இந்நிலையில், செங்கோட்டையன் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு நேற்று முன்தினம் இரவு, அந்த பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது.
கோபி கரட்டூரில் உள்ள இந்த அலுவலகம், கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் இருந்தபோது அவரால் அமைக்கப்பட்ட அலுவலகம் ஆகும். மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் இந்த அலுவலகத்தையே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் எடப்பாடி அணி நிர்வாகிகள், நல்லகவுண்டன்பாளையம் அருகே உள்ள பாலாஜி நகரில் அதிமுக அலுவலகம் திறந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பொருட்படுத்தவில்லை. மாறாக, கே.ஏ.செங்கோட்டையன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து கரட்டூர் அலுவலகத்தையே பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த அலுவலகத்திற்குள் எந்த இடத்திலும் எடப்பாடியின் புகைப்படம் இல்லை. அலுவலக முகப்பில் உள்ள பேனரில் இருந்த எடப்பாடி படமும் அகற்றப்பட்டு விட்டது.
இந்நிலையில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் என்ற வாசகங்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.
* எடப்பாடி பெயரை உச்சரித்த செங்கோட்டையன்
செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி பேட்டி அளித்தபோது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை உச்சரிக்கவில்லை. அதன்பிறகு நிருபர்கள் பல இடங்களில் கேள்விகளை கேட்டபோதும் எடப்பாடியின் பெயரை கூறவில்லை. ஆனால் நேற்று அவர் பேட்டியளித்தபோது, ‘‘கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்றபிறகு...’’ என்றும் கூறினார்.
* நீக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்வேன்
‘கட்சி விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவை எடுக்க இருக்கிறேன். என்னை நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்பேன். அவர் தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் இருக்கிறார். தேர்தல் ஆணையம் அவரை அங்கீகரிக்கவில்லை. இன்னும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. 53 ஆண்டு காலம் தீவிர உறுப்பினராக இருந்த என்னை நீக்கி இருக்கிறார். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடர இருக்கிறேன்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
* 1972ல் அதிமுகவில் எம்ஜிஆரின் புனித பயணத்தில் உறுப்பினராக மட்டுமன்றி, செயலாளராக இருந்து பணியாற்றியவன்.
* இமயமே தலையில் விழுகிறது என்றாலும் சறுக்காமல் இயக்கத்திற்கு விசுவாசம் உள்ள தொண்டனாக இருக்கின்ற காரணத்தினால் இத்தனை பொறுப்புகளும் வழங்கி இருக்கிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டு இருக்கிறார்.
* தேவர் பெருமகனாருக்கு மரியாதை செலுத்தியதற்கு பரிசாக என்னை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்திருக்கின்றனர்.
* எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களுடன் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தவர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களையும் அரவணைத்து அழைத்து வந்து, அங்கீகாரம் தந்து கட்சியை வழிநடத்தினார்கள்.