Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிச்சன் டிப்ஸ்

* இட்லி உப்புமா செய்யும்போது மீந்துபோன இட்லிகளை இரண்டு மணிநேரம் பிரிட்ஜ்ஜில் வைத்திருந்து உப்புமா செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வெளியே எடுத்து வைத்துவிட்டு பிறகு உதிர்த்து செய்தால், உப்புமா கட்டியில்லாமல் உதிரி உதிரியாக இருக்கும்.

*எலுமிச்சை ஊறுகாயில் துண்டுகள் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள விழுதில் கேரட்டைத் துண்டுகளாக்கிப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் கூடுதல் சுவையாக இருக்கும்.

* ரசம் தாளிக்கும்போது புளிதண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல், தாளிக்கும் எண்ணெய்யில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

* எந்த வகை காய் பொரியல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டைச் சீவி துருவலைக் கலந்து செய்தால் டேஸ்ட்டாக இருக்கும்.

*வெண்பொங்கல் செய்யும்போது, பொங்கல் வெந்து வந்ததும், காய்ச்சிய பாலில் ஒரு கரண்டிவிட்டுக் கிளறி மூடினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

* இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவை வித்தியாசமாகவும், சூப்பராகவும்இருக்கும்.

* பூரி செய்யும்போது ஹோட்டல் பூரி போல் உப்பலாக வர கோதுமைமாவைப் பிசையும்போதே ஒரு தேக்கரண்டி சோள மாவு, அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமத்தும் போகாது.

*வேகவைத்த உருளைக்கிழங்குடன் அரிசிமாவு, கடலைமாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் பிரமாதமான சுவையில் ஓமப்பொடி தயார்.

*நாலு டம்ளர் கோதுமைமாவுக்கு அரைடம்ளர் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து கோதுமையுடன் கலந்து உப்பு போட்டுக் கரைத்து தோசை வார்த்தால் தோசை

மிருதுவாக இருக்கும்.

* கொத்துமல்லி சட்னி மீந்து விட்டால் மோரில் கலந்து கரைத்துவிட்டால், மசாலா மோர் தயார்.

* சப்பாத்திக்கு மாவுபிசையும்போது ஒரு தேக்கரண்டி பால்பவுடர் அல்லது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி வித்தியாசமான சுவையில் இருக்கும்.

* ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் போடும்போது அதில் காய்ச்சாத நல்லெண்ணெய் மேலே நிற்குமாறு ஊற்றினால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

* ஒரு டம்ளர் கொதிக்கும்நீரில் நறுக்கிய கோவைக்காய்த் துண்டுகளைப்போட்டு ஒரு நிமிடம் மூடி வையுங்கள். பிறகு வடிகட்டி வதக்கினால், அதிக எண்ணெய் இல்லாமலே கோவைக்காய் பொன்னிறமாக வதங்கிவிடும்.

* வத்தல், வடாம் வகைகள் கடையில் வாங்கி பயன்படுத்தும்போது, மிதமானவற்றை வெயிலில் உலர்த்திவிட்டு, பின் பொரித்துப் பாருங்கள். எண்ணெய் குடிக்காது.

* இட்லியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதில் கெட்டித் தயிர் ஊற்றி, அதன் மேல் தக்காளி சாஸ் விட்டு, சாட் மசாலா தூவினால் சாப்பிட ருசியாக இருக்கும்.

* அரிசி கழுவிய இரண்டாவது நீரில் சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு முதலியவற்றை வேகவைத்து எடுக்கும்போது அதன் அரிப்புத் தன்மை நீங்கிவிடும்.

* குருமாவிற்கு தேங்காய் அரைக்கும்போது தேங்காயுடன் மூன்று நான்கு முந்திரியையும் சேர்த்து அரைத்துவிட்டால், குருமாவின் ருசியும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

* டீ தூள் போட்டு கொதிக்க வைக்கும்போது அதனுடன் ஒரு தேக்கரண்டி, சர்க்கரைபோட்டு கொதிக்க வைத்தால் பாத்திரத்தில் கறை படியாது. - ஆர். கீதா, கேரளா.

* வத்தக்குழம்பு செய்யும்போது, கடுகு தாளித்தவுடன் மிளகாய்ப் பொடியை எண்ணெயில் வதக்கி பின் புளியைக் கரைத்து விட்டால், குழம்பு மணமாக இருக்கும்.

* தயிர்வடை செய்யும்போது உளுத்தம் பருப்புடன் ஐந்தாறு முந்திரிப் பருப்பையும் ஊற வைத்து அரைத்து செய்தால் வடை மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* பட்டர் பீன்ஸ் பொரியல் செய்யும்போது தேங்காயுடன் இரண்டு ஸ்பூன் சீரகமும், பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்துச் சேர்த்தால் வித்தியாசமான மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.

* கோவைக்காயை நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி, உப்பு, பச்சைமிளகாய் அரைத்துப் போட்டு, புளித்த தயிரை ஊற்றி, கிளறி, ஒரு நாள் ஊற வைத்து, காய வைத்தால் கோவைக்காய் வற்றல் ரெடி.

* பிரிட்ஜில் வைத்து எடுக்கும் வெண்ணெய், ஐஸ்கிரீம், நெய் போன்றவற்றை உடனே உபயோகிக்க சூடான ஸ்பூனால் எடுத்தால் எளிதில் எடுக்க வரும். - எஸ். ஆஷாதேவி, சென்னை.

* வாழைக்காயை துருவி பொரியல் செய்யும்போது, அதனுடன் சிறிதளவு இஞ்சியையும், கேரட்டையும் துருவி சேர்த்தால், பொரியல் நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.

* மிளகாய் பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து பின் பஜ்ஜி செய்தால் மிளகாய் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.

* பக்கோடா மாவில், சிறிது நெய்யும், தயிரையும் கலந்து பக்கோடா செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

* தேங்காய் அதிகமாக இருந்தால், அதனை ஓட்டில் இருந்து எடுத்து சிறுசிறு துண்டுகளாக்கி வாணலியிலிட்டு வதக்கி எடுத்து அவற்றை ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை பயன்படுத்த முடியும்.

* சமைப்பதற்கு அதிகமாக பனீர் வாங்கிவந்துவிட்டால், தேவைக்குப் போக மீதமுள்ள பனீரை அப்படியே கவருடன் வைக்காமல், மூடி உள்ள ஒரு டப்பாவில் சிறிதளவு தண்ணீர்விட்டு, அதில் பனீரை வைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

* சமையலுக்கு எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சம் பழங்கள் காய்ந்துவிட்டால், சூடான தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால், பழம் சற்று ப்ரஷ்ஷாகிவிடும். பின்னர் அவற்றிலிருந்து சாறு பிழிந்து சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இட்லி மாவை என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் சில நேரம் மாவு புளித்து விடும். அப்படி மாவு புளிக்காமல் இருப்பதற்கு, பிளாஸ்டிக் டாப்பாவில் மாவை வைத்து காற்று புகாதவாறு மூடிவைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காது.- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.