* கத்தரிக்காய் மலிவு விலையில் கிடைக்கும்போது வாங்கி சுத்தம் செய்து நறுக்கி, பின்னர் உப்பு, மஞ்சள் தூள் கலந்து ஒரு கொதிவிட்டு எடுத்து வெயிலில் காயவைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
* தக்காளியுடன் கொஞ்சம் புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி மிக்சியில் அரைத்து எடுத்து சூடான தோசையில் தடவி சாப்பிட்டால் இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.
* பருப்பு அடை செய்யும்போது, அடைமாவுடன் சிறிதளவு விதை நீக்கிய சுரைக்காயைத் துருவி சேர்த்து அடை செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
* பருப்பு பாயசம் செய்யும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலந்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வடாம் செய்வதற்கு பச்சைமிளகாயை அரைத்து வழித்ததும் கைகளில் ஏற்படும் எரிச்சலைப் போக்க, கைகளை வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்த பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
* கலர் கலராக வடாம் தயாரிப்பதற்காக கலர் பொடிகளை சேர்ப்பதற்கு பதில், தக்காளிச்சாறு, காரட் சாறு, பீட்ரூட் சாறு, முருங்கை இலைச்சாறு சேர்த்து கூழ் தயாரித்தால் பல நிறங்களும் கிடைக்கும், சத்தாகவும் இருக்கும்.
* அவரை, பீன்ஸ், கொத்தவரங்காய் இவைகளை உப்பு போட்டு வேகவிட்டு, நீரைவடித்துவிட்டு வெயிலில் நன்றாகக் காயவிட்டு எடுத்து வைத்துக் கொண்டால் காய்கறி இல்லாத சமயத்தில் வத்தக்குழம்பாக வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது எண்ணெயில் பொரித்து வத்தலாகவும் சாப்பிடலாம்.
* வெங்காயத் துருவலை ஜவ்வரிசிக் கூழுடன் சேர்த்து காய்ச்சி வத்தல் போட்டால் சுவையாக இருக்கும்.
* அதிகளவு புளி வாங்கி வைக்கும்போது, புளியில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க, புழு வராமல் இருக்கும்.
* அதிகமாக நெய் வாங்கி வைக்கும்போது அதில் கொஞ்சம் வெந்தயத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் நெய் கெடாமல் இருக்கும்.
* சுண்டல் செய்வதற்கான கடலையை முதல் நாளே ஊறவைக்க மறந்து விட்டால், கடலையை லேசாக வாணலியில் வறுத்துவிட்டு, வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து பின்னர், வேகவைத்தால் கடலை நன்கு வெந்துவிடும்.
பாதுஷா செய்யும்போது, பாதுஷாவுக்கு மாவைப் பிசைந்து உருட்டி வில்லைகள் போட்டவுடன் ஊசியால் குத்திவிட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போட்டால், பாதுஷா நன்கு ஊறி சுவை கூடுதலாக இருக்கும்.
* தற்போது வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலமாகும். இந்த சமயத்தில் வேப்பம் பூக்களை சேகரித்து சுத்தம் செய்து உலர்த்தி வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் துவையல், குழம்பு போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சூடான சாதத்தில், சிறிதளவு வெந்தயப் பொடி, உப்பு, காயப்பொடி ஆகியவற்றுடன் சூடான எண்ணெய்விட்டு பிசைந்து சாப்பிட நல்ல ஜீரணமாகும்.- பிரியாமது, புதுச்சேரி.
* சப்பாத்தியின் மேல் சர்க்கரை, ஏலத்தூள் கலந்த தேங்காய்ப்பாலை ஊற்றி, ஐந்து நிமிடம் ஊறவைத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
* அடைக்கு அரைக்கும் மாவுடன் ஒரு தக்காளி சேர்த்து அரைக்கவும். அதனுடன் துருவிய கேரட் அல்லது பீட்ரூட் சேர்த்து ஒரு சுற்றிச்சுற்றி மாவை எடுக்கவும். கொத்துமல்லித்தழை சிறிதளவு சேர்த்து, மெல்லிய தோசை களாக ஊற்றி, முறுகலாக வேகவைத்து எடுத்துப் பரிமாற வண்ணமயமான மசாலா அடை தயார்.- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
* பிரியாணிக்கு தனியாக சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு கொதிக்கவிட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.
* பூண்டை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு மேல் தோலை நீக்கினால் எளிதில் வந்துவிடும்.
* நீர்மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் சுவை வித்தியாசமாக இருக்கும்.- சே.தமிழரசி, அயப்பாக்கம்.
* வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் ரஸ்கை மிக்ஸியில் அரைத்து தூளாக்கி சிறிது தூவினால் சரியாகிவிடும்.
* தேங்காய்த் துவையல் அரைக்கும்போது சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைத்தால், துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* எள்ளடைக்கு தயாரிக்கும் மாவில் பூண்டை உரித்து நசுக்கிப் போட்டுப் பிசைந்து சுட்டால், சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* காலிப்ளவரை சமைப்பதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் சிறிது சர்க்கரை, சிறிதளவு உப்பு கலந்து அந்த நீரில் பூக்களை சிறிது நேரம் போட்டு எடுத்தால் புழுக்கள் அழிந்துவிடும். ஃபிளவரும் வெண்மையாக இருக்கும்.- கே.பிராபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
* பொட்டுக்கடலையை ஊறவைத்து, அத்துடன் ஒரு கைப்பிடி அரிசியையும் ஊறவைத்து மிக்ஸியில் உப்பு, பச்சை மிளகாய் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு, போண்டா செய்தால் பொட்டுக்கடலை போண்டா சூப்பராக இருக்கும்.
* வெஜிடபிள் ரைஸ், நெய்சாதம் போன்றவற்றிற்கு தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் விட்டு செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
* வாழைக்காயின் பிஞ்சுகளை பறித்து வேக வைத்து, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கிரைண்டரில் ஆட்டி வடாம் பிழிந்து, காய வைத்து பொரித்தால் சூப்பரான வத்தல் தயார்.
* கறிவேப்பிலை, தனியா, உளுந்து, மிளகு, சீரகம் தலா இரண்டு ஸ்பூன் எடுத்து சூடான வாணலியில் வறுத்து பெருங்காயம் சேர்த்து வறுத்து, பொடி செய்து குழம்பு, சாம்பார், ரசம், கூட்டு செய்ததும் கடைசியில் ஒரு ஸ்பூன் பொடியைப் போட்டால். சுவை சூப்பரோ சூப்பர்.
* வெங்காயம், முட்டைக் கோஸ் இவை களில் சல்பர் சத்து அதிகம், இதனால் அதிக நேரம் வேகும்போது ஒருவித வாடை ஏற்படும். எனவே, இவற்றை முக்கால் பதத்திலேயே வேக வைப்பது சிறந்தது.
* கறி, கீரை, பருப்பு வகைகளில் அதிக புரோட்டின் சத்து உள்ளது. அதிகநேரம் வேகவைக்க வேண்டும். அப்போதுதான் ஜீரணம் நன்றாக ஆகும்.
- அமுதா அசோக்ராஜா,அரவக்குறிச்சிப்பட்டி.


