ஜெனிவா: கில்லர் ரோபோக்கள் எனப்படும் தானியங்கி ஆயுத அமைப்புகளின் பயன்பாட்டிற்கு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஐநா மற்றும் செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டாரெஸ் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல் ஜாரிக் ஆகியோரின் கூட்டு அறிக்கையை ஐநாவின் ஜெனிவா செய்தி தொடர்பாளர் அலெஸாண்ட்ரா வெலுச்சி வாசித்தார்.
இதில்,‘‘கில்லர் ரோபோக்கள் எனப்படும் தானியங்கி ஆயுத அமைப்புகளின் பயன்பாட்டினால் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட வேண்டுகோள் மற்றும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சர்வதேச விவாதங்களின் அடிப்படையில் கில்லர் ரோபோக்களை பயன்படுத்துவதற்கு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நாடுகள் விதிக்க வேண்டும். இது முழுமையான தடையை கோரவில்லை என்றாலும், இத்தகைய ஆயுத அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
போர்களத்தில் இவற்றின் பயன்பாடு உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அத்தகைய சூழல் எதிர்காலத்தில் ஏற்படும்போது பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மனிதர்களை இயந்திரங்கள் தானாகவே குறிவைப்பது என்ற தார்மீக எல்லையை தாண்டும் நிலைக்கு நாம் ஆபத்தான வகையில் நெருங்கிவிட்டோம். இன்று நாங்கள் இந்த கோரிக்கையை இன்னும் அதிக அவசர உணர்வுடன் மீண்டும் முன்வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.



