Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுகிழங்கு...50 கிராம் விதை 5 கிலோவுக்கு பெருக்கும்!

நம்மாழ்வாரின் தொடர்ச்சியான இயற்கை வேளாண்மை குறித்த உரையாடலால் பல இளைஞர்கள் ஆர்கானிக் விவசாயத்தின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பினார்கள். அவர்களில் ஒருவர்தான் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள மேல் சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ். இளம் விவசாயியான இவர் இயற்கை முறையில் நெல், சிறுவள்ளிக்கிழங்கு, பூசணி போன்றவற்றை விளைவிக்கிறார். ஒரு காலைப்பொழுதில் மோகன்ராஜைச் சந்தித்தோம். “சிறுகிழங்கு ஒரு அற்புதமான பயிருங்க. 50 கிராம் எடை கொண்ட விதைக்கிழங்கை நட்டா அது 5 கிலோ வரைக்கும் பெருத்து மகசூல் தரும்’’ என பேச ஆரம்பித்தவர், அதன் சாகுபடி முறை குறித்தும் தெரிவித்தார்.``கிழங்குக்கு கிழங்கு ஒரு அடியிலர்ந்து ஒன்னரை அடி இடைவெளி இருக்கணும். அரையடிக்கு மேட்டுப்பாத்தி போட்டு, அதுல விதைக்கறது நல்லது. பாருக்கு பார் 2 அடி இடைவெளி இருக்கணும். அடியுரமா கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு போடணும். வைகாசி ஆரம்பத்துல விதைக்கணும். விதைக்கிழங்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு கிடைக்கும். 3 சென்ட் நிலத்துல 10 கிலோ விதைக்கிழங்கு விதைச்சிருக்கோம். விதைச்சி 2 மாசம் கழிச்சி 2 களை எடுத்துட்டு, மண் அணைக்கணும். திட்டமா (அளவோட) தண்ணி குடுக்கணும். மாசத்துக்கு ஒருமுறை மீன் அமிலம் மேலயும், அடியுரமாவும் குடுக்கணும். ஒரு கிழங்கு விளைஞ்சா குறைஞ்சது 2 கிலோ இருக்கும். அதிகபட்சமா 5 கிலோ வரைக்கும் வரும். இதுக்கு பராமரிப்பு வேலை, செலவு குறைவு. களை எடுக்குறதும் மண் அணைக்கறதும் மட்டுந்தான் முக்கிய வேலை. ஆனி மாசத்துல நடவு செஞ்சிருக்கேன். மாசி மாசம் அறுவடைக்கு வந்துடும்” என்றார்.

மஞ்சள் பூசணிக்காய் கொடிகளும் இவரது தோட்டத்தில் உள்ளன. அதுகுறித்து கூறுகையில், “வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற நம்ம எடத்துல பூசணிக்கொடி வச்சிருக்கோம். பூசணி விதையை நல்லா ஊறவச்சிடணும். மண்ல ஆத்துப்போன (1 ஆண்டுக்கு மேலான மட்கிய) எருவைப் போட்டுட்டு அதுல ஒரு அடி பள்ளம் எடுத்து பூசணி விதையை நட்டேன். பசுங்காட்டை விட, மட்கும் குப்பை கொட்டி ஆத்துப்போன இடத்துல வச்சா மஞ்சப்பூசணி நல்லா வளரும், நல்லா காய்க்கும். இப்படி 10 கொடி வளந்திருக்கு. இந்தவாட்டி 2 முறை மீன் அமிலம் குடுத்தேன். 10 லிட்டர் தண்ணிக்கு 10 மில்லிலிட்டர் அளவுக்கு கலந்து வேருக்கு மீன் அமிலம் குடுத்தேன். ஆவணி மாசக் கடைசியில விதை போட்டிருந்தோம். அதுபாட்டுக்கு கொடி ஓட ஆரம்பிச்சி, ஐப்பசி கடைசில காய்ப்பு வந்துச்சி. வழக்கமா ஒரு காய் 5 கிலோ இருக்கும். நம்ம பூசணி ஃபஸ்ட் காய்ப்புல ஒரு காயே 10 கிலோ அளவுக்கு பெருத்துச்சி. அதுக்கப்புறம் காய்ச்சது இன்னும் அதிக எடை வரும்.

சம்பா பட்டத்துல கால் ஏக்கர்ல பொன்னி நெல் போட்டிருக்கோம். இந்த நெல்லுக்கு கடலை புண்ணாக்கு, மீன் அமிலம்லாம் ஊட்டத்துக்கு குடுப்போம். விளையறதுல வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கிட்டது போக மிச்ச நெல்லை வித்துடுவோம். சம்பா போகம் முடிஞ்சதும் பிரதானப் பயிரா கீரை போடுவோம். அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகிய 4 வகை கீரை போடுவோம். கத்தரி, மிளகாயும் போடுவோம்” என்றவர், விளைபொருட்களின் விற்பனையைப் பற்றி பேசினார். ``சிறுவள்ளிக்கிழங்கு மேல முடி மாதிரி வளர்ந்திருக்குறதால இதை மயிர்க்கிழங்குன்னும் சொல்வாங்க. கொழகொழப்புத்தன்மை அதிகமா இருக்குற இது மூட்டுவலிக்கு நல்லதுங்கறதால உள்ளூர் மார்க்கெட்லயே வித்துடலாம். போன வருஷம் விளைஞ்சத நாங்க ரோட்டோரத்துல வச்சி வித்தோம். மக்கள் ஆர்வமா வாங்கிக்கறாங்க. கிலோ 70 ரூபாய்க்கு வித்தோம். மஞ்சள் பூசணிக்கா பொங்கல் பண்டிகைக்கு முக்கியமானது. வீட்டு பயன்பாட்டுக்குப் போக இந்தப் பூசணியை விற்கவும் செய்றோம். பத்தை பத்தையா போட்டு பத்தை 15 ரூபாய்க்கு விக்கறோம். அடுத்த பட்டத்துல கீரைகள் போடுவோம். கீரைக்கு எப்பவுமே சந்தை இருக்கு ”என்கிறார் இயற்கை முறையில் பலபயிர் மற்றும் மாற்றுப் பயிர் செய்யும் மோகன்ராஜ்.

தொடர்புக்கு:

மோகன்ராஜ் - 70940 04645