பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு பகுதிகளில், தொழிலாளர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, கிட்னி தானம் என்ற பெயரில், பல மருத்துவமனைகளில் போலியான ஆவணங்கள் மூலம் கிட்னி அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பள்ளிபாளையத்தில் இரு புரோக்கர்களுக்குள் ஏற்பட்ட தொழில் சச்சரவு காரணமாக, தொழிலாளர்களிடம் மருத்துவமனைகளில் கிட்னி திருடப்படுவதாக சமூக வலைதளங்களில் புகார் வந்தது. கிட்னி கொடுத்தவர், பெற்றவர், மருத்துவமனைகள் என யாரும் புகார் கொடுக்க முன்வராத நிலையில், மதுரை கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கிட்னி தொடர்பாக விசாரணை நடத்த, சுகாதார துறை இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பள்ளிபாளையம் கோரக்காட்டுபள்ளத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகியோரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறப்பு புலனாய்வு படையினர் மேலும் கூடுதல் தகவலை பெறுவதற்காக, சிறையில் உள்ள புரோக்கர்களை விசாரணைக்கு எடுக்க குமாரபாளையம் கோர்ட்டில் மனு செய்தனர். பின்னர், சிறையில் உள்ள புரோக்கர்களை 5 நாட்கள் சிறப்பு புலனாய்வு படையினர் இன்று கஸ்டடி எடுத்துள்ளனர். பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள பயணியர் மளிகையில் புரோக்கர்களை பாதுகாப்பாக வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
