Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கார்கே பங்கேற்ற மைதானத்தை சுத்தம் செய்த விவகாரம்; வன்கொடுமை சட்டத்தின்கீழ் ராகுல் காந்தி மீது வழக்கு: உத்தரகாண்ட் போலீசார் நடவடிக்கை

டேராடூன்: ஹல்த்வானி பொதுக்கூட்ட மைதான சுத்தகரிப்பு விவகாரத்தில் அவதூறாக பேசியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 8ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்ரீராம் சேனா தர்மார்த் சேவா அறக்கட்டளை அமைப்பினர் கடந்த 10ம் தேதி அதே மைதானத்தில் தூய்மைப்படுத்தும் யாகம் ஒன்றை நடத்தினர். இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய கார்கே, ‘நான் பங்கேற்ற மைதானத்தை தீட்டுக்கழித்து சுத்தகரிப்பு செய்தவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 11ம் தேதி மைதானத்தில் நடந்த வழக்கமான தூய்மைப் பணியை சாதிய தீண்டாமை குற்றச்செயலாக சித்தரித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உண்மைக்கு மாறான தகவல்களை கூறி தங்களது சமூக உணர்வுகளை புண்படுத்தியதாக ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த அமித் குமார் அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்தி மீது கோட்வாலி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் 196, 299 மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1)(க்யூ) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நைனிடால் எஸ்.எஸ்.பி. டி.சி.மஞ்சுநாத் கூறும்போது, ‘புகார்தாரர் அளித்த தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அமித் சைனி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.