கேரளாவில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: நடன ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் நடன பயிற்சி அளிக்கும்போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் பிரசித்தி பெற்ற கலாமண்டலம் நடன ஆசிரியர் கனககுமார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்தி பெற்ற கலாமண்டலம் நடன மையம் உள்ளது. இங்கு பரதநாட்டியம், கதகளி, திருவாதிரை உள்பட பாரம்பரிய நடன கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆகவே இந்த மையம் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகும்.
இந்தியாவில் பல பிரபல நடன கலைஞர்கள் இங்கு நடனம் பயின்றுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நடனம் கற்பதற்காக வருகின்றனர். இங்கு கூடியாட்டம் என்ற கேரள பாரம்பரிய நடனத்தை பயிற்றுவிக்கும் கனககுமார் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நடன பயிற்சி அளிக்கும்போது தங்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கூறி 6 மாணவிகள் கலாமண்டலம் துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரை துணைவேந்தர் செருதுருத்தி போலீசுக்கு அனுப்பி வைத்தார். கனககுமார் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.