திருவனந்தபுரம்: கேரளத்தில் மழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4 நாளில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் கடந்த 4 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. 7 பேரை காணவில்லை. 18,434 பேர் 418 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றும் கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வயநாடு உள்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த மாவட்டத்தில் தற்போது உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மலையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ தெரிவித்துள்ளார்.
வயநாடு மாவட்டத்திலுள்ள தாமரைசேரி மற்றும் பால்சுரம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று வயநாடு, இடுக்கி, காசர்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பத்தனம்திட்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேற்று முதல்வர் வி.டி. சதீசன் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான முழு அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். வெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதல்வர் வி.டி. சதீசன் கூறினார்.


