Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கேரளத்தில் தொடர் மழை வயநாட்டில் மீண்டும் பயங்கர மண் சரிவு உயிரோடு மண்ணில் புதைந்து 5 பேர் பலி: 7 பேரை காணவில்லை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 தொழிலாளர்களை காணவில்லை. 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டம் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை மற்றும் புத்துமலை ஆகிய பகுதிகளில் கடந்த இரு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2 வருடங்கள் ஆன பிறகும் இந்த பயங்கர சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் இப்பகுதி மக்கள் மீளவில்லை. இந்நிலையில் நேற்று மேப்பாடி பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேப்பாடி பகுதியில் கள்ளாடி என்ற இடத்திலிருந்து ஆனக்காம்பொயில் என்ற இடம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப்பகுதியை குடைந்து அங்கிருந்து பெருமளவு மண் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் பல்வேறு இடங்களில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இவை ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனத்திற்கு வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ உத்தரவிட்டிருந்தார். மேலும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த நிறுவனம் பணிகளை நிறுத்தி வைக்கவோ, குவித்து வைத்திருந்த மண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ செய்யவில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் இடைவிடாது பலத்த மழை பெய்து வந்தது.

ஆனாலும் நேற்று காலை வழக்கம் போல சுரங்கப்பாதை பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணியளவில் திடீரென அங்குள்ள மலைப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் அடித்துச் செல்லப்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மண்ணுக்கடியில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து அறிந்தவுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கோழிக்கோடு மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்த மண்சரிவில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. அனைவரும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர். இந்த மண் சரிவில் சிக்கிய மேலும் 7 தொழிலாளர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மண்ணுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட 9 பேர் படுகாயங்களுடன் வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* லாரிக்கு அடியில் சிக்கி உயிர் தப்பிய தமிழக தம்பதி

லாரிக்கு அடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயா (37) என்ற கூடம்மாள் கூறியது: நானும், கணவர் பாலகுமாரும் தோட்ட வேலைக்காக வயநாட்டுக்கு வந்திருந்தோம். கடந்த இரு தினங்களாக இங்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் நானும், கணவனும் வங்கி வேலைக்காக மேப்பாடிக்கு செல்வதற்காக மீனாட்சி பாலம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம். அப்போது மலையின் மேலிருந்து மண் சரிந்து வருவதை நாங்கள் பார்த்தோம்.

அதிர்ச்சியடைந்த நாங்கள் உள்பட அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தோம். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு டேங்கர் லாரி மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அப்போது லாரிக்கு அடியில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி நின்றதால் காயமின்றி மயிரிழையில் உயிர் பிழைத்தோம். இது எங்களுக்கு இரண்டாவது ஜென்மம் ஆகும். இவ்வாறு திகிலுடன் ஜெயா கூறினார்.

* மனிதனால் ஏற்பட்ட அழிவு

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா கூறியது: வயநாடு மேப்பாடியில் ஏற்பட்ட மண்சரிவு இயற்கை சீற்றமல்ல, இது மனிதனால் ஏற்படுத்தப்பட்டதாகும். சுரங்கப்பாதை பணியில் ஏற்பட்டுள்ள நிறுவனம் அங்கு குவித்து வைத்திருந்த மண்ணை அப்புறப்படுத்தவில்லை. மண்ணை அங்கிருந்து நீக்க வேண்டும் என்று ஏற்கனவே கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகும் அந்த நிறுவனம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதுதான் தற்போது ஏற்பட்ட அழிவுக்கு காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

* கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்தும், அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதாலும் வயநாடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* மண்ணுடன் அடித்துச் செல்லப்பட்ட பஸ், லாரி

சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள மீனாட்சி பாலத்தில் தொழிலாளர்கள் வந்த ஒரு பஸ்சும், ஒரு டேங்கர் லாரியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் மலையிலிருந்து மழை வெள்ளத்துடன் சேறும், சகதியும், மண்ணும் சீறிப் பாய்ந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் டேங்கர் லாரி சேற்றுடன் அடித்துச் செல்லப்பட்டது.

அதைப் பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் 3 பேர் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். பெரும் திகிலை ஏற்படுத்திய இந்தக் காட்சிகள் அங்கிருந்த ஒரு கடை முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

* சுற்றுலா பயணிகள் சிக்கி உள்ளார்களா?

மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகே தான் சுற்றுலாப் பகுதி உள்ளது. தினமும் இந்த மீனாட்சி பாலம் வழியாகத்தான் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் அந்த வழியாக சென்றிருந்தால் அவர்களும் இதில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்படி யாரேனும் மண்சரிவில் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.