Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கேளம்பாக்கம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொ**: 3 பேர் கைது

திருப்போரூர்: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே தையூர், சின்னம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் பிரவீன்குமார் (23). இவர், அப்பகுதியில் ஒரு தனியார் நிறுவன ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே சாலையோரத்தில் நின்றபடி பிரவீன்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே காரில் வந்த நபர்களில் சிலர், பிரவீன்குமாரிடம் முகவரி கேட்பது போல் விசாரித்தனர். அப்போது பின்னால் நின்றிருந்த 3 பேர், பிரவீன்குமாரை சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, 2 கைகள் மற்றும் முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவரவே, பிரவீன்குமாரை விட்டுவிட்டு காரில் ஏறி மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரவீன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனை கொடுத்த தகவலின்பேரில் கேளம்பாக்கம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகளை, கடந்த சில வருடங்களாக பிரவீன்குமார் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இக்காதலை விரும்பாத பெண்ணின் பெற்றோர், சக உறவினர்களுடன் பிரவீன்குமாரை தாக்கினர் என்ற விவரங்கள் தெரியவந்தது.

இதற்கிடையே, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, பிரவீன்குமாரை அரிவாளால் சரமாரி தாக்கிய தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (48), மணிகண்டன் (31), நந்தீஸ் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.