Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கேளம்பாக்கம் மயானத்தில் நள்ளிரவில் பரபரப்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மறுநாளே பிரபல ரவுடி முகம் சிதைத்து கொடூர கொலை: கைதான 4 பேரிடம் விசாரணை

சென்னை: சென்னை அருகே மயானத்தில், ஜாமீனில் வெளிவந்த மறுநாள் நள்ளிரவே பிரபல ரவுடி முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் உள்ள கே.எஸ்.எஸ். நகர் பகுதியை ஒட்டி கேளம்பாக்கம் மயானம் உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு மயானப் பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றவர்கள் அங்கு கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் தலை சிதைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து தகவல் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கேளம்பாக்கம் ஜோதி நகரைச் சேர்ந்த ஷாகுல் அமீது (27) என்பது தெரிய வந்தது. கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர், இன்ஸ்பெக்டர் தமிழன்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஷாகுல் அமீது மீது பல்வேறு கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், கிரேடு ஒன் ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் தெரிய வந்தது.

கொளத்தூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருடன் கூட்டாளியாக இருந்து பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தற்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறைக்கு சென்றதும் தெரிய வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜாமீனில் வெளியே வந்து நேற்று முன்தினம் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபடி சுற்றி வந்துள்ளார்.

அதன் பிறகு இருட்டில் கொலை செய்துவிட்டு, உடன் இருந்த கும்பல் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட ஷாகுல் ஹமீதுவின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாயார் மற்றும் சகோதரிகளுடன் அவர் வசித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டு கொலை செய்ய பயன்படுத்திய பொருட்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

இதனையடுத்து, ஷாகுல் அமீதை கொலை செய்ததாக அவரது எதிர் கோஷ்டியான தையூர் பாரதி நகரைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகன் அருண் (31), ஏகாட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சூர்யா (32), தையூர் பாலமா நகர், மேட்டு தெருவைச் சேர்ந்த முரளிதாஸ் என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (36) மற்றும் கேளம்பாக்கம் ஜோதிநகரை சேர்ந்த அஸ்கர் அலி என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் (25) ஆகிய 4 பேரை நேற்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், இந்த கொலை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* பழிக்குப்பழியா...?

கொளத்தூர் ரவுடியுடன் சேர்ந்து செய்த ஒரு கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே ஷாகுல் அமீது ெகாலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் படத்தை செல்போனில் வைத்திருந்த அந்த கும்பல், பழிக்குப்பழி வாங்குவதற்காக காத்திருந்ததும், அதேபோல் முகத்தை சிதைத்து வெட்டுவோம் என்று சபதம் எடுத்திருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

பழிக்குப்பழியாக நடந்த கொலையா அல்லது தொழில் போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கொளத்தூர் ரவுடியை பிடிக்கவும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

* இன்ஸ்டா பதிவு காரணம்

கொலை செய்யப்பட்ட ஷாகுல் அமீதின் சகோதரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அதனால் எந்த வம்புக்கும் போக வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், அதை மீறி ‘கஞ்சா விற்பனையிலும், கேளம்பாக்கத்திற்கும் ‘நானே டான்’ என்று இன்ஸ்டாவில் ஷாகுல் அமீது போட்ட ரீல்ஸ் எதிர் கோஷ்டியை சீண்டிப் பார்த்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

* கோட்டை விட்ட உளவுத்துறை

கொலை செய்யப்பட்ட ஷாகுல் அமீது கடந்த 27ம் தேதி ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டம் தீட்டி இருப்பது குறித்து போலீசாருக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதையடுத்து ஷாகுல் அமீதின் இருப்பிடத்தை கண்டறிய போலீசார் முயற்சித்தனர். ஆனால், தான் பூந்தமல்லியில் இருப்பதாக உறவினர்கள் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு கேளம்பாக்கத்திலேயே தங்கியுள்ளார்.

அப்போது அவரை கண்காணித்த எதிர் கோஷ்டி அவருடன் பழக்கத்தில் இருந்தவர்களை வைத்தே, அவரை போட்டு தள்ளி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆனால், ஷாகுல் அமீதின் நடமாட்டத்தை கண்காணித்த உளவுத்துறை போலீசார், அவரது எதிர்கோஷ்டியினரின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறியதே கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.