புதுடெல்லி: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் பல பிரச்னைகளை கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியப் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளேன். கீழடி ஆராய்ச்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டி கோரிக்கை வைத்தேன். தமிழின் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை இந்த உலகிற்கு உரக்க சொல்ல பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.