Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இன்னும் முயற்சி செய்யுங்கள்!

நம் முயற்சிகள் தோற்கலாம். ஆனால் முயற்சிப்பதில் தோற்றுவிடக் கூடாது. ஒரு மனிதன் அவன் எடுத்துச் செல்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விடுகின்றபோது அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அவன் தன்னுடைய வாழ்க்கையில் நேற்றைய தினம் பெற்றிருந்த அறிவை விட, பாடங்களை விட இன்று சற்று அதிகமாகவே கற்று இருக்கிறான் என்பதை எண்ணிப் பெருமைப்பட வேண்டும் என்று ‘ஜோனத்தன் ஸ்விப்ட்’ சொல்வதை மனதில் நிறுத்தி நம் முயற்சிகளைத் தொடர வேண்டும்.

வாழ்க்கை என்பது அறிவாற்றலாலும் அல்ல, ஆராய்ந்து பார்ப்பதிலும் அல்ல உறுதியுடன் உழைப்பது தான் என்கிறார் எமர்சன். உறுதியோடு உழைப்பவர்களால் தான் பல உன்னதங்களைக் காண முடியும். இலட்சியத்தை அடைய எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காமல் எல்லாப் படிகளையும் முயன்றால் கடந்து விடலாம் நம்புங்கள். தயங்கி நிற்பவர்களுக்குச் சிரமம் தான். ஒரு காலத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் முதலில் உயில் எழுதி வைத்து விட வேண்டும்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சிகிச்சையாகக் கருதப்பட்டது அறுவை சிகிச்சை. மனிதர்கள் நோயினால் படும் வேதனையைக் கண்டு கண் கலங்கினார் சிம்சன். இதை மாற்றியமைக்க வேண்டும் என்று சிந்தனை செய்தார். பல விதமான ஆராய்ச்சியில் மூழ்கினார்.

அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்கும் வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரே முடிவை எடுத்து தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். நாட்கள் ஓடின, வருடங்கள் கடந்தன. தன்னுடைய சிந்தனை மூலம் ஆராய்ச்சியை விடாமல் செய்தார். அதன் பயன் குளோரோஃபார்ம் என்ற மருந்தைக் கண்டுபிடித்தார். இதை பயன்படுத்துவதன் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட எவரும் உயிர் வாழ இயலும் என்று நிரூபித்துக் காட்டினார்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு காரணம், முடியும் என்ற அவருடைய ஒரே சிந்தனைதான். எந்த விஞ்ஞானியும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டமையால் தான் கருவிகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நான் எதை வேண்டும் என்று கருகிறனோ அந்தப் பொருள் எனக்கு உடனடியாகவோ, நாட்கள் கழித்தோ கிடைக்கிறது என்கிறார் தத்துவ ஞானி ஹன்றி தொர்ரே.

பெரும்பாலும் இங்கே ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. முயற்சி செய்யும்போது வீண் முயற்சி என்பார்கள். வெற்றி பெற்றால் விடாமுயற்சி என்பார்கள்.தயவுசெய்து இதை மாற்றிக் கொள்ளுங்கள். முடிந்தால் முயற்சி செய்பவர்களை உற்சாகப்படுத்துங்கள், அலட்சியப்படுத்தாதீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி வந்து விடாது. முட்டி உடைத்து முயற்சி செய்து தான் குஞ்சு கூட முட்டையில் இருந்து வெளி வருகிறது.

முதலில் நீ உன்னை வேலையில் முழு மூச்சுடன் ஈடுபடுத்திக் கொள். அப்பொழுது கிடைக்கும் ஆற்றல் உன்னால் தாங்க முடியாத அளவுக்கு உனக்கு வந்து சேரும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த வார்த்தைகளுக்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

23 வயதான கோமல் தியாகி இன்று இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கண் பார்வையற்ற வீராங்கனையாக, மாற்றுத்திறன் தடகள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து சாதித்து வருகிறார்.நூறு மீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் அதிவேக ஓட்டப்பந்தயங்களில் தேசிய அளவில் சாதனை படைத்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா மாற்றுத்திறனாளி விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, 2016-ஆம் ஆண்டு குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளிலும் அவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த கோமல்,பிறப்பிலிருந்தே பார்வைத்திறனை இழந்தவர்.ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளைப் போலவே அவரும் தனது பார்வையற்ற இரண்டு உடன்பிறந்தவர்களுடன் ஒரு சாதாரண பள்ளிக்குச் சென்றார். ஆனால், பார்வைத்திறன் குறைபாடு காரணமாகப் பாடங்களைப் பின்தொடர்வதில் அவருக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது.அவரது குடும்ப உறுப்பினர்கள் படிக்காதவர்களாக இருந்ததால்,அவரை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் சேர்ப்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.

குவாலியரில் கண்பார்வையற்றோருக்கான ஒரு பள்ளி இருப்பதை அறிந்ததும், தம்பிகள் இருவரை மட்டும் அங்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்தனர்.கோமல் வளர்ந்தவர் என்பதால்,அவருக்கு இது மிகவும் தாமதமாகிவிட்டது என்று அவர்கள் கருதினர்.ஆனால், கோமல் பின்வாங்கவில்லை;தனக்காகத் தானே போராடி,தனது பெற்றோரை வற்புறுத்தி, இறுதியில் 2015-ஆம் ஆண்டில் தனது சகோதரியுடன் அந்த உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 14 வயது. அதுவரை அவர் ஒருபோதும் தனது வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்ததே இல்லை.

அதுவரை கோமல் எந்த விளையாட்டிலும் ஈடுபடுவதைப் பற்றி யோசித்ததே இல்லை. ஆனால்,அந்தப் பள்ளியின் இயக்குநர் அவரது உடல் வலிமையையும்,நடையையும் கவனித்து, அவரை விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்தார்.டிசம்பர் 3-ஆம் தேதி, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நடைபெற்ற ஒரு சிறிய போட்டியில், குண்டு எறிதல் பிரிவில் கலந்து கொண்டு தனது முதல் முயற்சியிலேயே பதக்கம் வென்றார்.இது அவரை டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் சென்றது.

தொடர்ச்சியான பயிற்சியில் கவனம் செலுத்துமாறு அவரது பயிற்சியாளர் அறிவுறுத்தினாலும், கோமல் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரண்டிலும் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.இதன் மூலம் மத்தியப் பிரதேசத்திலிருந்து சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பின் தேசியப் பதக்கத்தைப் பெற்ற முதல் கண்பார்வையற்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

இருப்பினும், அவரது பயணம் எளிதாக இருக்கவில்லை.பிளஸ் 2 முடித்த பிறகு ஏற்பட்ட பெருந்தொற்று காலத்தில், வீட்டிற்குத் திரும்பிய அவருக்குத் திருமணப் பேச்சுகள் எழுந்தன. ஆனால், கல்வியிலும் விளையாட்டிலும் உறுதியாக இருந்த கோமல், எப்படியோ தனது பெற்றோரைச் சம்மதிக்க வைத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

புதிய சூழலும் அங்குள்ள பயிற்சியாளர்கள் ஆதரவும் அவர் மீண்டும் விளையாட்டுத் துறைக்குத் திரும்ப உதவியது. டெல்லியில் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு,அவர் குவாலியரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி மையத்திற்கு தனது பயிற்சியை மாற்றிக்கொண்டார்.

2024-ஆம் ஆண்டில், கடுமையான நிதி நெருக்கடியால் விளையாட்டை விட்டு முற்றிலும் விலகும் சூழல் ஏற்பட்டது. மேலும் பிரத்யேக ஓட்டக் காலணிகள், சத்தான உணவு மற்றும் கூடவே ஓடும் ‘வழிகாட்டி வீரர்’ எனப் பல நிதிச் சுமைகள் இருந்தன. இருந்த போதும் அத்தனையும் தகர்த்தெறிந்து முன்னேறிச் சென்றார் கோமல்.ஒரு பெண்ணாக, மாற்றுத்திறனாளியாக மற்றும் ஒரு கிராமப்புறச் சூழலில் இருந்து வந்தபோதும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்திருந்தார்.

என்னைப் போலவே இன்னும் எத்தனையோ பேர் வெளியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு எல்லாம் நான் ஒரு ஊக்க சக்தியாக இருப்பேன். அவர்கள்தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார் கோமல்.

இதன்மூலம் கோமலின் வெற்றி என்பது ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்லாமல், சரியான ஆதரவு கிடைத்தால் எத்தகைய தடைகளையும் தகர்க்க முடியும் என்பதற்கான சான்றாகத் திகழ்கிறது.பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி குண்டு எறிதலிலிருந்து ஓட்டப்பந்தயத்திற்கு மாறிய கோமல், குறுகிய காலத்திலேயே அங்கும் தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்துள்ளார்.

ஒவ்வொரு வீரருக்கும் தேசத்திற்காக விளையாடி சர்வதேச அளவில் சாதித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு உண்டு.எனக்கும் அதே கனவுதான் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார் கோமல்.இவர் ஒரு மாற்றுத்திறனாளி அல்ல,பலருடைய வாழ்க்கையை மாற்றும் திறனாளி என்றால் மிகையாகாது.இவரைப் போலவே முயற்சி செய்யுங்கள்,,இன்னும் முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும்.