Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கவின் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

டெல்லி: நெல்லை கவின் கொலை வழக்கில், பெண்ணின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த கவினும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ். சுபாஷினியும் காதலித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கவின் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக சுபாஷினியின் இளைய சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து அவரது உறவினர் ஜெயபால், பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் சரவணனும், கிருஷ்ணகுமாரியும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் என்பதால், ஆரம்பத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளையில், இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனும் கிருஷ்ணகுமாரியும் தங்கள் மகளுக்கும் கவினுக்கும் இடையேயான காதலை 2016-17 முதல் அறிந்திருந்தனர் என்றும் சரவணன் தனது மகளை எச்சரித்ததுடன், 2018-19 காலப்பகுதியில் கவினிடமும் தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கவினின் தாயை கிருஷ்ணகுமாரி தொடர்புகொண்டு எச்சரித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், பெண்ணின் பெற்றோருக்கும் சுர்ஜித்துக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பையோ உரைடாயலையோ நிரூபிக்க நேரடி சாட்சிகளோ தடயங்கலோ இல்லை என்று தெரிய வருவதால், சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், வழக்கில் புலனாய்வாளர்கள் கண்டறிந்த பல்வேறு அம்சங்களையும் உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.  அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.