Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி நாடகங்கள்

கர்நாடகாவின் கபினி அணையில் திறக்கப்பட்ட நீர், இன்று தமிழகத்திற்கு வந்து விட்ட நிலையில், காவிரியை சுற்றி நடக்கும் அரசியல் நாடகங்களுக்கு மட்டும் குறைவே இல்லை. கர்நாடகாவில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் இவ்வாண்டு தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளும் நீர்மட்டம் குறைவாக காட்சியளித்தன. காவிரி ஒழுங்காற்று குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழகத்திற்கு 15 தினங்களுக்கு விநாடிக்கு 3500 கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டன.

அந்த உத்தரவை வழக்கம்போல் கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்ட நிலையில், இயற்கையின் ஆசீர்வாதம் காரணமாக கர்நாடகாவில் கனமழை கொட்டியதால், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீர் இன்று தமிழகத்திற்கு வந்து சேரும் நிலையில், கர்நாடக அரசின் காவிரி நாடகங்களும் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை.

குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் என கர்நாடக அரசின் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் கடந்த வாரம் வரை கூவிக்கொண்டிருந்தனர். தமிழக முதல்வர் விஜய் நேரில் வந்து ஆய்வு செய்யலாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உரக்க கூறிவிட்டு, பின்னர் போராட்டங்களை காரணம் காட்டி, தமிழக முதல்வர் இங்கு வரவேண்டாம் என பல்டி அடித்து விட்டார். உண்மையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நிலை என்ன என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.

குடிநீருக்கே பஞ்சம் வரும் என கூறிக்கொண்டிருந்த அணைகள் 2 தினங்களில் நிரம்பியது எப்படி என்கிற கேள்விக்கு விடை தெரியவில்லை. காவிரி கண்காணிப்பு குழுவினர் அணைகளை கண்காணிக்கும் லட்சணமும் இப்படித்தான் இருக்கும் என்கிற விமர்சனமும் எழுகிறது. வெள்ள அபாயத்தால் தண்ணீரை அணைகளில் தேக்கி வைத்தால் ஆபத்து என கர்நாடக முதல்வர், தங்கள் மாநிலத்தில் போராடும் அமைப்புகளிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு, அங்குள்ள அணைகளில் உபரி நீர் உள்ளது. ஆனால் அதை தமிழகத்திற்கு தர கர்நாடகாவிற்கு மனம் இல்லை.

அங்குள்ள அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் காவிரி விவகாரத்தில் பச்சை பொய்யை தெரிவித்துக் கொண்டே இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் வரும் 13ம் தேதி பந்த் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடகா மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்தாலும் கன்னட அமைப்புகள் அதை கண்டு கொள்வதாக இல்லை.

ஆனால் காவிரி தொடர்பாக தமிழக முதல்வர் வாயை திறந்து பேச மறுக்கிறார். மேகதாது பிரச்னை என்பது மேற்கத்திய பிரச்னை என்பது போல் தமிழக அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது. காவிரி என்பது மாநிலத்தின் தலையாய பிரச்னையாக இருக்கும்போது, அதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க கூட அரசு தயக்கம் காட்டுகிறது.

கர்நாடகாவில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் டி.கே.சிவக்குமார், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்ததற்கான காரணங்கள் மற்றும் கர்நாடக அரசின் மேல் முறையீடுகள், போராட்டங்களை கைவிடுவது குறித்து விவாதித்துள்ளார். மாநில நலன் சார்ந்த நடவடிக்கைகளை இனிமேலாவது தவெக அரசு முன்னெடுக்க வேண்டும்.