காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்: தனியார் கம்பெனிகளுக்கு எச்சரிக்கை
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு களப்பணியில் அலுவலர்கள் தீவிரம் காட்டி, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கம்பெனி மற்றும் தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சியில் உள்ளன.
இதில் ஆங்காங்கே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், குமிழி, கல்வாய், காயரம்பேடு, பெருமாட்டுநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும், இதேபோல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் டெங்கு கொசுக்கள் பரவி வருகிறது.
இதனால் பச்சிளம் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு கொசுவை ஒழிப்பதற்காக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துரைராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், ஆனந்தராஜ், கலையரசன், ருக்மணி உள்ளிட்ட அலுவலர்களுடன் ஏராளமான ஊழியர்கள் திரண்டு சென்று வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கம்பெனிகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் பிளாஸ்டிக் டிரம்களில் சுத்தமான தண்ணீரை மாத கணக்கில் தேக்கி வைத்திருப்பதையும், டயர்கள் தேங்காய் சிரட்டைகளை குயில் குவியலாக தேக்கி வைத்திருப்பதை அகற்றி கொசு மருந்து அடித்து வருகின்றனர். மேலும் அதில் டெங்கு கொசுக்கள் இருப்பதைக் கண்டு சம்பந்தப்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கம்பெனிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் பிரிவுகள் 3(25), (2), (4), 83, (1) மற்றும் 84(1) ஆகிய பிரிவுகளை மீறியதற்காக எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர்.