செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாட்டுக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது. தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற தலைவர்களாக இருந்த நடராஜன் மற்றும் பாலு ஆகியோரிடம் பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கியுள்ளார். சுடுகாட்டுக்குச் சொந்தமான இடம் என தெரிந்தே அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வெங்கடாபுரம், தெள்ளிமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் புதைப்பதற்கு சுடுகாட்டில் போதுமான இடமில்லை.
பெரும்பாலானோர் சமாதி கட்டிவிடுகின்றனர். அதை இடிக்க முடியாத சூழ்நிலையில் ஏற்கனவே உடலை புதைத்த இடத்திலேயே மேலும் மேலும் புதைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சுடுகாட்டுக்கு இடம் பற்றாக்குறை இருப்பதால் ஏற்கனவே தெள்ளிமேடு சுடுகாட்டுக்குச் சொந்தமான 40 சென்ட் நிலம் தனி நபரான சந்திரன் என்பவரின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இந்த ஆக்கிரமிப்பு குறித்து தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில் 40 சென்ட் நிலம் தெள்ளிமேடு சுடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலம் என்பது உறுதி செய்யப்பட்டு, அந்த நிலத்தை கையகப்படுத்த வருவாய்த்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளருக்கு உரிய கால அவகாசம் கொடுத்து இடத்தை காலி செய்யச்சொல்லி உரிய நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர் தாமாகவே காலி பண்ணித் தராததால் செங்கல்பட்டு வட்டாட்சியர் முன்னிலையில் நேற்று 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். அப்போது அதிகாரிகளை சந்திரன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
