Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்பாடி சுற்றுப்புற பகுதிகளில் 13 யானைகள் அட்டகாசம்; வாழை, நெற்பயிர்கள் சேதம்: சாலையில் அணிவகுத்து சென்றதால் பொதுமக்கள் அச்சம்

வேலூர்: காட்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாழை, நெற்பயிர்கள் உள்ளிட்டவற்றை 13 யானைக்கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. மேலும் இவை சாலையில் அணிவகுத்து சென்றதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியொட்டியுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை சார்ந்து ஆந்திராவில் கவுண்டன்யா வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள், சிறுத்தைகள் அதிகம் காணப்படும் இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் கூட்டம் தமிழக எல்லைக்குள் நுழைவது வழக்கம். இவை சேலம், ஈரோடு வனப்பகுதிக்குள் செல்வதும், வேலூர், திருப்பத்தூர் வனப்பகுதியான ஜவ்வாதுமலை வனப்பகுதிக்குள் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு வரும் யானைக்கூட்டம், விவசாய நிலங்களில் உள்ள வாழைத்தோட்டங்களையும், கரும்பு தோட்டங்களையும், நெற்பயிர்கள், தென்னை மரங்களையும் நாசம் செய்கின்றன.

இதனால் சில நேரங்களில் எல்லை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள், யானைகள் புகுந்து சேதப்படுத்துவதை தவிர்க்க சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கின்றனர். இதில் சில நேரங்களில் வனவிலங்குகள் மட்டுமின்றி மனிதர்களும் சிக்கி பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ஆந்திர-தமிழக வன எல்லைப்பகுதிகளில் சோலார் மின்வேலி, அகழி வெட்டும் திட்டம் குறித்து வனத்துறை நீண்ட நாட்களாக ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரதராமி, பனமடங்கி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 4 குட்டிகள் மற்றும் 9 யானைகள் என மொத்தம் 13 யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து காட்பாடி செங்குட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியும், கிறிஸ்டியான்பேட்டையை ஒட்டியும் சாலையில் மெட்டுக்குளம் நோக்கி அணிவகுத்து சென்றன.

சாலையில் யானைகள் வரிசையாக செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். யானைகள் காட்பாடி-சித்தூர் சாலையை கடந்து சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து, மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் காட்பாடி வனச்சரகர் கந்தசாமி மற்றும் 20 வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் இன்று அதிகாலை வரை ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இரண்டு குழுக்களாக பிரிந்து காட்பாடியில் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் தற்போது பனமடங்கி, பரதராமி பக்கம் மீண்டும் சென்றுள்ளன. இன்று அவை கவுண்டன்யா வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.