Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திமுக-தவெக இடையே காரசார மோதல்; திட்டமிட்டு திசை திருப்பி ரீல்ஸ் போட கச்சதீவு விவகாரத்தை எழுப்புவதா?.. பேரவையில் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேறந்று பால்வள மேம்பாட்டுத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை ஆகிய துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராமநாதபுரம் தொகுதி உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்(திமுக) பேசியதாவது: 2018ம் ஆண்டு இலங்ைக அரசு ஒரு சட்டத்தை ெகாண்டு வந்தது. அதன் பின்பு இன்று வரை காற்றின் வேகம் காரணமாக எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபடுத்தப்படுகின்றனர். விசைப்படகுகளை இழக்கும் மீனவர்களை வாழ்வாதாரத்தை சீர்படுத்தும் வகையில் விசைபடகிற்கு ரூ.6 லட்சம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதை ரூ.8 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.

அமைச்சர் என். ஆனந்த்: கச்சத்தீவைக் கொடுத்ததே அவர்கள் தான். (இந்த நேரத்தில் திமுகவினர் எழுந்து அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்) திமுக கொறடா எ.வ.வேலு: கச்சத்தீவைக் கொடுத்தது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தான். அது தவறு என்று கலைஞர் முதல்வராக இருந்தபோதே இதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அமைச்சர் நிர்மல் குமார்: ஒன்றிய அரசு கச்சத்தீவைத் தாரைவார்க்க முயன்றது சரிதான். ஆனால் அப்போது இருந்த தமிழக அரசு என்ன செய்தது? கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதைத் தடுத்திருக்கலாம். (சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது)

திமுக கொறடா எ.வ.வேலு: தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தான் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என்று இந்திரா காந்திக்குப் பலமுறை கடிதம் அனுப்பினோம். அவருக்குப் பின்னர் வந்த பிரதமர்களிடமும் அதே கோரிக்கையை வைத்தோம். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. தாரகை கத்பர்ட்(காங்கிரஸ்): கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதைக் கொடுத்துவிட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் கடற்பகுதியில் இந்தியாவுக்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம். 285 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவைக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்காக 25 லட்சம் ஏக்கர் கடற்பகுதியின் உரிமையைப் பெற்றிருக்கிறோம். இதுதான் வரலாறு.

கோவி. செழியன்(திமுக): எங்கள் உறுப்பினர் படகுப் பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால் நீர்வளத்துறை அமைச்சர் திடீரென கச்சத்தீவு விவகாரத்தைத் தொடங்கினார். பின்னர் சட்டத்துறை அமைச்சர் எழுந்து நீண்ட நேரம் விளக்கம் அளித்தார். இதிலிருந்து ஓர் உண்மை புரிகிறது. முறையாகச் சென்றுகொண்டிருக்கும் விவாதத்தைத் திசைதிருப்ப வேண்டுமென்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் கருத்துச் சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து நின்று எதிர்வினையாற்ற வேண்டும். அந்தக் காட்சி மட்டும் படம்பிடிக்கப்பட்டு, வெளியே அவர்கள் அமைதியாகப் பேசுவது போலவும் திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பதுபோலவும் ‘ரீல்ஸ்’ வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது விவாதம் அல்ல, திட்டமிட்ட காட்சிப்படுத்தல். இவ்வாறு விவாதம் நடந்தது.