கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்: இந்திய பக்தர்கள் 3,143 பேர் பங்கேற்பு
வருவாய்த்துறை, புலனாய்வுத்துறை, குடியேற்றப்பிரிவு, சுங்கத்துறை, கியூ பிரிவு போலீசாரின் சோதனைக்கு பின், 78 விசைப்படகுகளில் 2,867 பக்தர்கள், 21 நாட்டுப்படகுகளில் 276 பக்தர்கள் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இலங்கையில் இருந்து சுமார் 4,800 பக்தர்கள் என மொத்தம் இருநாடுகளை சேர்ந்த 8,200 பக்தர்கள் பங்கேற்றனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்த் தலைமையேற்று நேற்று மாலை 4.30 மணிக்கு புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில், இருநாட்டு பக்தர்களும், சிலுவையை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து வழிபட்டனர். இன்று காலை கூட்டு திருப்பலி நடைபெற்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். அதை தொடர்ந்து இருநாட்டு பக்தர்களும் கச்சதீவில் இருந்து திரும்புவர்.