Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்: அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் கதறி அழுது போராட்டம்!

சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமான சம்பவம் கடந்த மூன்று நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலக் கடற்கரையில் 6 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், காசிமேட்டைச் சேர்ந்த மோகன் என்பவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கடந்த மூன்று நாட்களாக காசிமேடு மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காசிமேடு மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று காலை முதலே பதற்றமான சூழல் நிலவியது. மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மீனவர்களைச் சந்திப்பதற்காக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அலுவலகத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் கண்ட மீனவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி முற்றுகையிட்டு, தங்களது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

அப்போது, "எங்கள் மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற அரசு தவறிவிட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு உயிர் பறிபோன பிறகுதான் எங்களைச் சந்திக்க வருகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், கடந்த மூன்று நாட்களாக ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடைபெறுவதாக மீன்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மீனவர்களே படகு கவிழ்ந்த சம்பவம் மற்றும் மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய தகவல்களைத் தெரிவித்ததாகவும், மீன்வளத் துறை சார்பில் தங்களுக்கு எந்தவிதமான தகவலும் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், மீன்வளத் துறை அமைச்சர் இதுவரை தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும், மீட்புப் பணிகள் தொடர்பாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் எனக் கூறி, அரசுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மீனவர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டதால் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.