Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜ திட்டம்? புதுச்சேரி பார்முலாவை பயன்படுத்த வாய்ப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 நியமன எம்எல்ஏக்கள் மீதான பார்வை அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்திற்கு முன்னதாகவே நியமனம் செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களைப் போலவே, துணை நிலை ஆளுநரால் நியமனம் செய்யப்படும் 5 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும் நேரத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களையும் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆகிவிடும். பெரும்பான்மை பலத்திற்கு குறைந்தபட்சம் 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பெரும்பான்மை பலத்திற்கான 48 இடங்களை எந்த கட்சியோ, கூட்டணியோ பெறவில்லை. அதனால் தொங்கு சட்டசபை நிலைமை ஏற்படும் என்றும், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களும் கேம் சேஞ்சராக இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அவர்கள் பாஜவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதால், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் அச்சமடைந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை பொருத்தமட்டில், புதுச்சேரி பேரவை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. அங்கும், 3 நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களைப் போல பணியாற்றுவார்கள். அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுடன் கலந்தாலோசிக்காமல் 2 உறுப்பினர்களை பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரது முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2017-18ம் ஆண்டில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கும் வந்தது. முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே துணை நிலை ஆளுநர், 2 எம்எல்ஏக்களை நியமனம் செய்திருக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு வாதிட்டது. ஆனால், இதில் எந்தவித சட்ட மீறலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதனால் ஜம்மு - காஷ்மீரில் 5 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தற்போது முக்கியமாக பேசப்படுகிறது.

* உச்ச நீதிமன்றம் செல்வோம்

இது குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் சட்டமன்றத்தில் 5 நியமன எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒன்றிய பாஜ அரசு செயல்படுத்தினால், நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம்’’ என்றார்.

* சட்டப்படியான நடவடிக்கை இது

பாஜ மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், ‘‘5 நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது சட்டப்படியான நடவடிக்கை. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’’ என்றார்.

* பாஜ துருப்பு சீட்டு இன்ஜினியர் ரஷீத்

பாராமுல்லா தொகுதி சுயேச்சை எம்பியும், அவாமி இதிஹாத் கட்சி தலைவருமான ஷேக் அப்துல் ரஷீத் என்கிற இன்ஜினியர் ரஷீத், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். இவர் பாஜவின் கையாளாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ள தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா, காஷ்மீரில் பாஜ ஜெயிக்காவிட்டால், ஒன்றிய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டை நீடிக்க எதுவும் செய்வார்கள் என குற்றம்சாட்டி உள்ளார்.