Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பதில் எங்கே?

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி. பேச்சுவார்த்தை நடந்தால் கூட அது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தான் நடக்கும். இதுதான் காலங்காலமாக இந்தியா கடைபிடித்து வந்த நடைமுறை. அந்த நடைமுறையை பிரதமர் மோடி உடைத்தெறிந்து இருக்கிறார். காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவை மத்தியஸ்தம் செய்ய அனுமதித்து இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை அடுத்தடுத்து உறுதிப்படுத்தி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி இதுபற்றி வாய் திறக்க மறுத்து வருகிறார்.

1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றியது. பாக்.கிற்கு ஆதரவாக அமெரிக்கா விமானம் தாங்கிய போர்க்கப்பல்களை வங்கக்கடலில் நிறுத்தியது. இந்தியாவுக்கு ஆதரவாக அப்போதைய சோவியத் ரஷ்யா போர்கப்பலை அனுப்பி வைத்து இருக்கிறது. பதற்றத்திற்கு மத்தியில் பயமில்லாமல் பாகிஸ்தானில் புகுந்து இந்தியா அதிரடி தாக்குதல்களை நடத்தியது. 1971 டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கி போரில் மூர்க்கத்தனமாக அடிவாங்கிய பாகிஸ்தான் திடீரென இந்தியாவிடம் சரண் அடைந்தது. டிசம்பர் 16ஆம் தேதி போர் முடிவுக்கு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் என்ற தனி ஒரு நாட்டை உருவாக்கி காட்டினார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி. மேலும் பாக். கைவசம் இருந்த 15 ஆயிரம் கிமீ பரப்பளவை இந்தியா கைபற்றியது. 9 ஆயிரம் பாக். ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 93 ஆயிரம் பாக். வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். பாக். சரண் அடைந்ததாலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா சமாதானம் பேசியதாலும், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் அனைவரையும் விடுவித்தார் இந்திரா காந்தி.

இத்தனைக்கும் பாக். மீது போர் தொடுத்தால் நடப்பதே வேறு என்று இந்தியாவை மிரட்டினார் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன். பிரச்னை பற்றி பேச 1971 நவம்பர் மாதம் அமெரிக்கா சென்ற இந்திரா காந்தியை வேண்டும் என்றே 45 நிமிடம் காத்திருக்க வைத்தார். நேரில் சந்தித்த போதும் அவமதித்தார். அதை எல்லாம் பொருட்படுத்தாது இந்திரா காந்தி, அமெரிக்க அதிபர் நிக்சனிடம்,’ எங்கள் முதுகெலும்பு நேரானது. எந்தவொரு கொடுமையையும் எதிர்கொள்வதற்கான வளங்களும், திறனும் எங்களிடம் உள்ளன. மூன்று-நான்காயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் அமர்ந்துகொண்டு, தங்களின் விருப்பத்தை பின்பற்றுமாறு இந்தியாவுக்கு உத்தரவிடும் காலம் போய்விட்டது’ என்றார். இவை எல்லாம் நடந்தது 1971ஆம் ஆண்டு. அமெரிக்காவில் சென்று, அந்த நாட்டு அதிபரின் முன்னால் பெண் சிங்கமாக கர்ஜித்தார் இந்திரா. அதனால் தான் அவரை அப்போதைய பா.ஜ தலைவர் வாஜ்பாய், ‘துர்கா’ என்று வர்ணித்தார். இன்று...?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாக்.கிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா தகர்த்ததால் ஆத்திரம் அடைந்த பாக். நேரடியாக இந்திய எல்லைகளை தாக்கியது. இந்தியாவும் உரிய பதிலடி கொடுத்தது. 4 நாட்கள் நடந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தது அமெரிக்க அதிபர் டிரம்ப். அதன்பிறகு தான் இந்தியா மற்றும் பாக். நாடுகள் உறுதி செய்தன. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா அளித்த பதிலடி குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். அதற்கு முன்பு இந்தியா-பாக். போரை நிறுத்தியதே நான் தான் என்கிறார் டிரம்ப். வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என்று மிரட்டினேன். போரை நிறுத்த இந்தியா சம்மதித்து விட்டது என்கிறார். 56 இன்ஞ் மார்பு கொண்டவர் நமது பிரதமர் மோடி. இதையும் அவரே சொன்னது தான். இன்று வரை டிரம்ப் பேச்சுக்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.