Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் பலியானதும் 72 நாள் ஓடி ஒளிந்து கொண்டவர்தான் விஜய்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஊழல் கட்சி என்று விஜய் கூறியதாக கேட்கிறீர்கள். ஊழல் சக்தி என்று யாரை குறிப்பிட்டு சொல்கிறார்? விஜய் வெளியே வந்து பொதுவெளியில் பார்த்தால்தான் தெரியும். பொது வெளிக்கே வரவில்லை. கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்தனர். அந்த சம்பவம் நடந்து 72 நாட்களாக ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் விஜய் வெளியே வரவில்லை. அதன்பிறகுதான் வந்தார். நாட்டில் என்ன நடக்கிறது என்றும் அவருக்கு தெரியவில்லை. என்னென்ன கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி என்றும் தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்குகிறது என்றும் தெரியவில்லை. அவருக்கு ஒன்றுமே தெரியாதபோது, அதுபற்றி எங்களிடம் கேட்டால் எப்படி? அவரிடம்தான் கேள்வி கேட்க வேண்டும்.

ஏற்கனவே அமித்ஷா, நானும் கலந்து பேட்டி அளித்தபோது, அமித்ஷாவே கூறினார். அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டும் இணைந்து புதிய கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என்று அமித்ஷா கூறினார். இந்த கூட்டணி வெற்றிபெறும், அதிமுக ஆட்சி அமைக்கும். முதலமைச்சராக எடப்பாடி என்று தெளிவுபடுத்தி விட்டார். இதை விஜய், தொலைக்காட்சியில் பார்க்கவும் இல்லை, பார்க்க நேரமும் இல்லை. மக்களையும் பார்ப்பது இல்லை. ஒன்றுமே தெரியாதவரை வைத்து எங்களிடம் கேள்வி கேட்காதீர்கள். ஒரு கட்சியின் தலைவர் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். தெரியாமல், அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு தடவையாவது பிரஸ் மீட்டுக்கு வர வேண்டும். அப்படியென்றால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்று நிருபர்கள் கேள்வி மூலம் அவருக்கு தெரியும்.

ஊழல் என்கிறார், அவர் யாரை ஊழல்வாதிகள் என்று சொல்கிறார் என்றே தெரியவில்லை. ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும்போது நீதிமன்றம் சென்று நிரபராதி என்று வந்துள்ளேன். எப்படி ஊழல்வாதி என்று சொல்ல முடியும். அவர் யாரை கூட (செங்கோட்டையன்) வைத்திருக்கிறார். அதிமுகவில் இருந்து வெளியே போனவரை கூட வைத்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி, ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர். எங்களை குறிப்பிட்டு சொன்னால் தெளிவாக பதில் சொல்வோம்.

31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. சசிகலா பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அது முடிந்துபோன கதை, இனி அதுபற்றி கேள்வி கேட்காதீர்கள். எங்களுடைய கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.

* எடப்பாடிக்கு திடீர் ஞானோதயம் சமூக வலைதளங்களில் கிண்டல்

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே, அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறி வந்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் விஜய்க்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். கரூர் சம்பவத்தில் கூட 41 பேர் இறந்தபோது, விஜய் மீது குற்றம் சொல்லாமல், போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றே எடப்பாடி கூறி வந்தார். காரணம், அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவார் என்ற நம்பாசையில் அமைதியாக இருந்தார். ஆனால், விஜய் தனித்து போட்டி என்று சமீபத்தில் அறிவித்ததுடன், அண்மையில் தவெகவின் 3வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல் சக்தி என்றும், அடிமை கட்சி என்று மீண்டும் விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூறாமல், பாஜ தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமியையும் சீண்டினார். இது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனி விஜய், அதிமுக கூட்டணிக்கு வர மாட்டார் என்பதை தெரிந்து கொண்டு இன்று விஜய் மீது எடப்பாடி சாடியுள்ளார். ‘கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்ததற்கு விஜய் தான் காரணம், 72 நாட்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்தார் விஜய் என்று எடப்பாடிக்கு இதுவரை தெரியவில்லையா? இப்போது திடீர் ஞானோதயம் எப்படி வந்தது?,’ என்று எடப்பாடி பழனிசாமியை சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

* முதியோர் ஓய்வூதியம் ரூ.2000 ஆக அதிகரிப்பு, கல்விக்கடன் ரத்து

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: அதிமுக சார்பில் முதற்கட்டமாக 5 தேர்தல் அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது 2ம் கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்படுகிறது.

1. சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், விதவை பெண்கள், முதிர் கண்ணிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3ம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

2. மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் நலன்காக்கும் வகையில் வங்கியில் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யும் வகையில் அந்த தொகையை அரசே ஏற்கும்.

3. வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

4. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அரசின் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஆன்லைன் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே இருந்த நடைமுறை பின்பற்றப்படும்.

5. சிறுபான்மையினர் மகளிர்கள் சுயஉதவி குழுக்கள் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய-கிறிஸ்தவ உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மகளிர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.