Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் 12ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்: விஜய் பெயரும் இடம்பெற வாய்ப்பு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வரும் 12ம்தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய் பெயரும் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் முதல் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். உயரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், காயமடைந்தவர்கள், சம்பவம் நடந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள்,

கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து பதிவிட்டவர்கள் மற்றும் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் சி.டி.நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் என 400க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

அதேபோல் விஜய்யையும் 2 முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. கரூர் கலெக்டர் தங்கவேல், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்போதைய மத்திய மண்டல ஐஜி நிர்மல்குமார் ஜோஷி, எஸ்பி ேஜாஸ் தங்கையா ஆகியோரும் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். இந்த வழக்கில் சிபிஐ சார்பில் கரூர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கு, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் 12ம்தேதிக்குள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் அல்லது மதுரை, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரது பெயரும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* தேர்தல் நேரத்தில் நெருக்கடி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் விஜய் இதுவரை எந்த கூட்டணியிலும் இணைவதை அறிவிக்காத சூழலில், பாஜ அவரை தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக பேசப்படுகிறது. தேர்தல் காலத்தை முன்னிட்டு அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம் விஜய்க்கு அரசியல் மற்றும் சட்ட நெருக்கடிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.