கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி; விசாரணைக்கு ஆஜராகுமாறு 100 பேருக்கு சிபிஐ சம்மன்
கரூர்: கரூர் நெரிசல் பலி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு 100க்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்ைக சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரசார வாகனம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீளம், அகலம் ஆகியவை கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 9 மணி நேரம் அங்கு ஆய்வு நடந்தது.
இந்நிலையில் வேலுசாமிபுரத்தில் உள்ள மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கடைக்காரர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்ேடாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதில் இன்றும், நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று பலர் பயணியர் மாளிகையில் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விஜய் வந்தது எப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.
ஆதவ் அர்ஜூனா நிறுவன பணியாளரை தேடும் சிபிஐ
தவெக அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா “வாய்ஸ் ஆப் காமன்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு கரூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் பணிபுரிகிறாராம். இவர் கரூர் காமராஜபுரம் மூன்றாவது தெருவில் வசிப்பதாக கூறப்படுகிறது. ராம்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை தேடி காமராஜபுரம் 3வது தெருவுக்கு இன்று சென்றனர். ஆனால் அந்த முகவரியில் ராம்குமார் என்பவர் வசிக்கவில்லை. ராம்குமார் வேறு ஏதேனும் முகவரியில் வசிக்கிறாரா என சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.