கரூர் பலி விவகாரத்தில் திடீர் திருப்பம் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு பதில் மனு: விஜய் மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு புகார்
புதுடெல்லி: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையை சிபிஐ மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; எனவே அதனை ரத்து செய்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட குழுவில் மாநிலத்தைச் சேர்ந்தவர் இருக்கக்கூடாது என்று கூறுவது சட்ட விதிகளுக்கு முரணானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்டுள்ள அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், ‘கரூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தவெக தலைவர் விஜய் செல்லவில்லை; மாறாகக் காலதாமதமாகவே சென்றார். அதனால்தான் கூட்ட நெரிசல் போன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டது.
காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை அவர் முறையாகப் பின்பற்றவில்லை. காலையிலிருந்து கூடியிருந்த மக்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை’ என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநிலப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பாரபட்சமின்றிச் சரியான திசையில் சென்று கொண்டிருந்ததாகவும், எனவே சிபிஐ விசாரணையை ரத்து செய்து மாநில அரசின் விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.