Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சாட்சிகளை கலைக்க முயற்சி.!! கரூர் விவகாரத்தில் திமுக-வின் மனு நாளை அவசரமாக விசாரணை...

டெல்லி: கரூர் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக திமுக தொடர்ந்த இடைக்கால மனுவை, அவசர வழக்காக நாளை (ஜூலை 7, 2026) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவெக அமைச்சர்களுக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் திலீப் அக்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தற்போதைய தவெக அமைச்சர்கள் சாட்சிகளை கலைக்க முயற்சிப்பதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. மனுவின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இதனை விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறி உள்ளது.

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பல்வேறு சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவர் பேசுவது வழக்கின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வழக்கில் இருக்கும் சாட்சிகளை கலைப்பதற்கான வழிவகையை உருவாக்கும். எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்த உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு, கருணை அடிப்படையிலான அரசு வேலை, அரசாணைகள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்க மாநில அரசுக்கு சுதந்திரம் இருந்தாலும், சிபிஐ விசாரணை காலத்தில், உச்ச நீதிமன்றம் வகுக்கும் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அவை வழங்கப்பட வேண்டும்.தேர்தல் செய்தி

குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடவடிக்கை தொடர்பாக செல்வாக்கு செலுத்துதல், சாட்சிகளை மிரட்டுதல், விசாரணைக்கு தடையாக இருத்தல், பொது அறிக்கைகள் வெளியிட்டது. அனைத்தையும் அடிப்படையாக கொண்டு புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய புலனாய்வு பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குறிப்பாக தற்போதைய வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், நீதியின் நலன் கருதியும், விசாரணையின் நேர்மை, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், உச்ச நீதிமன்றம் பொருத்தமான மற்றும் சரியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தான் இந்த சம்பவத்திற்கு காரணம் எனப் பேசியதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக கோரியுள்ளது.

சிபிஐ விசாரணை முடியும் வரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக நிர்வாகிகள் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேசவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தவோ தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் கோடைக்கால விடுமுறையில் உள்ள நிலையில், விடுமுறைக் கால அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இது அவசர வழக்கு என்றும், உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு நாளை உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரணைக்கு எடுத்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.