Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் ரூ.16.24 கோடியில் 248 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது

*ஒன்றிய சுற்றுலாத்துறை தகவல்

கரூர் : கரூர் மாவட்டத்தில் ரூ.16.24 கோடியில் 248 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக மாவட்ட ஜல்சக்தி அபியான் மத்திய பொறுப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநர் ரோஷன் எம். தாமஸ் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கரூர் மாவட்டத்திலுள்ள நீர் ஆதாரங்களை மேம்பாடு மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஜல்சக்தி அபியான் மத்திய பொறுப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் சுற்றுலாத்துறை இயக்குநர் ரோஷன் எம்.தாமஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை இயக்குநர் ரோஷன் எம்.தாமஸ் பேசியதாவது: மத்திய மற்றும் மாநில அரசால் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் மேம்பாடு மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தொடர்புடைய அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்மேலாண்மை மற்றும் தூர்வாரும் பணிகள் முன்னேற்றம் தொடர்பான கள ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களை பொறுப்பு அலுவலர்களாக நியமித்து, தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று மத்திய மற்றும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை மற்றும் தூர்வாரும் பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, நீர் வள ஆதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறு குளங்கள், ஏரிகள், வாய்க்கால் போன்ற நீர் வளங்களை பாதுகாப்பதற்காக ஜல்சக்தி அபியான் என்கிற தீவிர நீர் பாதுகாப்பு பிரச்சார இயக்கம் மூலம் நீர் நிலைகளை தூர்வாருதல் மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும், நீர் நிலைகளைப் புத்துயிர் செய்வதாகும்.

மேலும் இந்த இயக்கத்தின் மூலம் மக்களிடம் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்து நீர் நிலைகளை பாதுகாத்து, நீர் சேமிப்பை உறுதி செய்யப்படுகிறது. மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகளை மறு சீரமைத்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நீர் வளங்களை பாதுகாக்க முடியும்.

நீர் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களை ஈடுபடுத்துவதன் மூலம் நீரை திறம்பட சேமித்து நீர் மேலாண்மையில் தற்சார்பு அடைய முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் கழிவுரை சுத்திகரித்து மறு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் இயற்கை வளங்களில் இருந்து பெறப்படும் நீரின் அளவை குறைக்க முடியும்.

நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்தி நீர்தேங்கும் பகுதிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நீர் நிலைகளை புத்துயிர் பெற்று, நீர் நிலைகளின் கரைகளில் மரங்களை நடுவதன் மூலம் மண்ணரிப்பை தடுக்க முடியும். நீரை பாதுகாப்பதற்கு அறிவியல் சார்ந்த திட்டங்களை உருவாக்கி இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் வள மையங்களை அமைத்து நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 8 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் 80 புதிய சிறு குளங்கள் ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டும், 2025-2026 ம் ஆண்டில் 248 குளங்கள் ரூ. 16.24 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு, பசுமையான கிராம ஊராட்சிகளை உருவாக்கும் வகையில் 1,88,805 மரக்கன்றுகள் ரூ. 20.49 கோடி மதிப்பீட்டில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

நீர் வள ஆதாரத் துறையின் சார்பில் காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்தில் 24 பணிகள், 117.50 கி.மீ ரூ. 4.31 கோடி மதிப்பீட்டிலும், அரியாறு வடிநிலை கோட்டத்தில் 7 பணிகள் 13.50 கி.மீ ரூ. 1.40 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கீழ்பவாணி கோட்டத்தில் 2 பணிகள் சுமார் 17.00 கி.மீ. ரூ. 15.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 33 பணிகள் 148 கி.மீ ரூ. 5.86 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் பயனற்ற நிலையிலுள்ள கல் குவாரிகளை மழைநீரை சேகரிப்பதற்காக பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை தந்து கரூர் மாவட்டத்தை நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஜல்சக்தி அபியான் மத்திய பொறுப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநர் ரோஷன் எம். தாமஸ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் எஸ். சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லேகாதமிழ்செல்வன், மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.