கரூர்: கரூர் மாவட்டம் சோமூரை சேர்ந்தவர் கோமதி. இவர் தனது வீட்டில் ‘சாரா’ என்ற சிட்சு வகை நாய் வளர்த்து வருகிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாராவை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருதி பாசத்துடன் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சினையாக உள்ள சாரா வரும் 15 முதல் 20ம் தேதிக்குள் குட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோமதி மற்றும் அவரது குடும்பத்தினர், பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்பு சடங்கை போன்று, செல்ல நாய் சாராவிற்கும் நேற்று வளைகாப்பு நடத்தினர்.
தட்டுகளில் சாராவிற்கு பிடித்த மிக்சர், பிஸ்கட், பழங்கள், பூக்கள் மற்றும் நாய்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து வைத்தனர். பின்னர் சாராவுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது. இதில் கோமதியின் உறவினர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
