Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு; துணை முதல்வரானார் ஜி.பரமேஸ்வர்: சித்தராமையா மகன் உள்பட 12 அமைச்சர்களும் பதவியேற்றனர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 25வது புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார். துணைமுதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வரும், சித்தராமையா மகன் உள்பட 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். கர்நாடகாவில் ஆட்சி தலைமை மாற்றம் ஏற்பட வசதியாக முதல்வர் பதவியை சித்தராமையா கடந்த 28ம் தேதி ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து புதிய முதல்வர் தேர்வு செய்ய கடந்த 30ம் தேதி பெங்களூரு விதானசவுதாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவகுமார் பெயரை, சித்தராமையா முன் மொழிந்தார். அதை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். அதை தொடர்ந்து ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரை சந்தித்து டி.கே.சிவக்குமார் உரிமை கோரினார். அதையேற்று கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வரும்படி முறைப்படி டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பெங்களூரு மக்கள் பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று மாலை 4.05 மணிக்கு புதிய முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது.

முதலில் வந்தேமாதரம் பாடலும், பின் தேசியகீதமும் பாடப்பட்டது. அதை தொடர்ந்து மாநில மொழி பாடல் பாடப்பட்டது. விழா மேடையில் இருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, கேரள மாநில முதல்வர் சதிசன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கே.சி.வேணுகோபால், ரனதீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோருக்கு டி.கே.சிவக்குமார் பொன்னாடை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

அதன்பின் டி.கே.சிவக்குமாரின் குருவான கங்காதரய்யா அஜ்ஜனாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு மாநில முதல்வராக டி.கே.சிவக்குமார், வீரகங்காதரய்யா அஜ்ஜய்யானாவின் பேரில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது விழாவில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

புதிய முதல்வருக்கு ஆளுநர் கெலாட் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். டி.கே.சிவக்குமாருக்கு மேடையில் இருந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து துணை முதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வர் பதவியேற்றார். பின்னர் கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, கிருஷ்ணபைரேகவுடா, பிரியாங்க் கார்கே , யு.டி.காதர், ஈஸ்வர்கண்ட்ரே, முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்தீரா, பைரதி சுரேஷ், சரணபிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

அவர்களுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் கெலாட் செய்து வைத்தார். புதிய அரசு பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் எம்.வீரப்பமொய்லி, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதீன், திரையுலக பிரபலகங்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், ஜோதிடர்கள், வாஸ்து நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* மாநில தலைவர் பதவி ராஜினாமா

முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமார், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பினார். 2020ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற டி.கே.சிவகுமார் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்து கட்சியை சிறப்பாக வழிநடத்தினார். இந்நிலையில், முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சபாநாயகர் ராஜினாமா

மாநிலத்தில் டி.கே.சிவகுமார் தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சியில் சபாநாயகராக இருந்த யு.டி.காதர், அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் ருத்ரப்பா லாமணியிடம் வழங்கினார். புதிய அரசில் யார் சபாநாயகராக பொறுப்பேற்பார்கள் என்பது விரைவில் தெரியும். மூத்த சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு சபாநாயகர் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* நாட்டின் பணக்கார முதல்வர்

நாட்டின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவரான டி.கே. சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த தேர்தலில் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, டி.கே. சிவகுமாருக்கு ரூ.1,413 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ரூ.931 கோடி சொத்துக்களுடன் இதுவரை முதல் இடத்தில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் விஜய் ரூ.625 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

* சோனியா, பிரதமர் மோடி வாழ்த்து

டி.கே.சிவகுமார் நேற்று மாலை முதல்வராக பதவியேற்றார். முன்னதாக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதே போல் கர்நாடக புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமியும் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.