Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீதி கிடைக்குமா?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதி ஷாக்யா கிராமம் தமிழக எல்லையை ஒட்டி இருக்கிறது. இந்த வனப்பகுதிக்குள் காணாமல் போன தங்கள் கால்நடைகளை தேடிச்சென்ற தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் தப்பித்து மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கர்நாடக வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதுடன் வனத்துறை அலுவலகத்தை சூறையாடினர். இந்நிலையில் இறந்தவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும் என்றனர்.

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இவர் ஒருவாரத்தில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை கொடுக்க இருக்கிறார். இதே போல் கர்நாடக பாஜவும் தனியாக உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளது. வனப்பகுதியில் அதிகாலை நேரம் நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டைகாரர்கள் வந்தனர். அவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதனால் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினோம் என்றும் அரியவகை மான்களை அவர்கள் வேட்டையாடியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டி அவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, அரிவாள், கத்தி, செருப்பு, கால்நடை இறைச்சி ஆகியவற்றை போலீசாரிடம் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இதில் செருப்பு மட்டும் புத்தம் புதியதாக ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் வலுத்துள்ளது.

கர்நாடக வனத்துறை பொய் சொல்கிறார்கள். இறந்தவர்கள் வேட்டைகாரர்கள் அல்ல. தங்கள் கால்நடைகளை தேடி வனத்துக்கு சென்ற சாதாரண மக்கள் என்று கிராமத்தினர் சொல்கிறார்கள். வனத்துறை பொய்வழக்கு போட்டு சம்பவத்தை மூடி மறைக்க பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறுகையில், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக வனத்துறை மீது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக அரசியல் தலைவர்கள் எங்கள் மாநில நிர்வாகத்தில் தலையிடுவதை ஏற்கமுடியாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதலில் யார் துப்பாக்கியால் சுட்டார்கள் என்று விசாரணையில் தெரியவரும் என்று சூசமாக கர்நாடக வனத்துறைக்கு ஆதரவாக கருத்தை பதிவிட்டுள்ளதால் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் உள்ள வேட்டை முகாம்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி தீவைத்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.