Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார்கில் வெற்றி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று ‘‘கார்கில் விஜய் திவஸ்’’ (Kargil Vijay Diwas) இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1999-ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்திய ராணுவம் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நினைவுகூரவும், நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

1999-ஆம் ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆயுததாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், ஜம்முகாஷ்மீரின் கார்கில் மலைப்பகுதிகளில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி பல முக்கிய சிகரங்களை ஆக்கிரமித்தனர். இதையடுத்து இந்தியா’ஆபரேஷன் விஜய்’ (Operation Vijay)என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

கடுமையான பனிப்பொழிவு, ஆக்சிஜன் குறைவு, செங்குத்தான மலைப்பகுதிகள் போன்ற மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் இந்திய வீரர்கள் அசாதாரண தைரியத்துடன் போராடினர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு, 1999 ஜூலை 26 அன்று அனைத்து முக்கிய சிகரங்களையும் இந்தியா மீட்டது. அதன்பிறகே அந்த நாள் ‘‘கார்கில் விஜய் திவஸ்’’ என அறிவிக்கப்பட்டது.

இந்தப் போரில் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்கள், வீரமரணம் அடைந்தோரின் குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

‘‘நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த வீரர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது. கார்கில் விஜய் திவஸ், அவர்களின் வீரம், தியாகம் மற்றும் தேசப்பற்றை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் பெருமைமிகு நாளாகும்.”