Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயிரிட்டு பரவலாக்கம் செய்யும் காரைக்கால் விவசாயி

புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் காரைக்கால் பிராந்தியம், காவிரி நீர் பாயும் டெல்டா பிரதேசத்தின் கடைமடை விவசாயப் பகுதியாக அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் 4500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் காரைக்கால் பகுதியில் விளைவிக்கக்கூடிய பெரும்பாலான நெற்பயிர்கள் ரசாயன முறையிலேயே சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் மழை, வெள்ளச்சேதங்களை தாக்குப்பிடித்து நின்று வளரும் பாரம்பரிய நெல் ரகங்களும் அதிகளவில் பயிரிடப்படுவதில்லை.இதனால் உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற நிலைதான் இங்குள்ள விவசாயிகளின் நிலையாக இருந்துவருகிறது. இந்நிலையில் காரைக்காலில் பல ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் பயிரிட்டு அசத்தி வருகிறார் பாஸ்கர் என்ற முன்னோடி விவசாயி.

காரைக்கால் அடுத்த வரிச்சிகுடியை சேர்ந்த இவர் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதே இல்லை. முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இடுபொருட்களையே பயிர்களுக்குப் பயன்படுத்தி வருகிறார். மேலும் ஒவ்வோர் ஆண்டும் புதுவிதமான பாரம்பரிய நெற்பயிர்களைக் கண்டறிந்து, அவற்றைப் பாரம்பரிய முறைப்படி சாகுபடி செய்கிறார். நெல் ரகங்கள் வளர்ந்ததும் அறுவடை செய்து, அதன் விதைகளை மற்ற விவசாயிகளுக்கு வழங்கி பரவலாக்கமும் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு வரை 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரக நெற்பயிர்களை அவரது விளைநிலத்தில் பயிரிட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரம் வகையான பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு அசத்தலான சாதனையை நிகழ்த்தி உள்ளார். மேலும் இந்தியாவின் பாரம்பரிய அரிய வகை நெல் ரகங்களையும் தனது நிலத்தில் பயிர் செய்துள்ள பாஸ்கர், ஒவ்வொரு முறை நடவு செய்யும்போதும் இயந்திரங்களின் பயன்பாட்டை நாடுவதில்லை. நமது ஆதிகாலத்து முன்னோர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி, அதன்படி பயிரிட்டு இயற்கை நுண்ணூட்டிகள், பஞ்சகவ்யம் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான விளைச்சலை எடுத்துவருகிறார்.

பாரம்பரிய நெற்பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து, பராமரித்து, அறுவடை செய்வதால், இந்த நெற்பயிர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும். அதன்படி தாம் விளைவித்த நெற்பயிர்கள் கடந்த காலங்களில் காரைக்காலில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையைத் தாக்குப்பிடித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயற்கையோடு இயைந்து தானாக வளர்ந்து மகசூல் தந்ததை பெருமையோடு நினைவுகூர்கிறார் விவசாயி பாஸ்கர். தற்போது விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்துள்ள பாஸ்கர், அவற்றை அரிசியாக்கி தனது வீட்டின் ஒரு பகுதியிலேயே வைத்து விற்பனை செய்து வருகிறார். இதன்மூலம் ஒரு பெரும் தொகையை லாபமாகவும் ஈட்டி வருகிறார். இயற்கையாக விளைவிக்கப்பட்ட மருத்துவக் குணம் கொண்ட இந்த அரிசி ரகங்களை வாங்க தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாஸ்கரைத் தொடர்புகொள்கிறார்கள்.

``பாரம்பரிய நெல் ரகங்களும், இயற்கை விவசாய முறையும் லாபகரமான வருவாயைத் தராது என்பதே பல ரசாயனப் பயன்பாட்டு விவசாயிகள் கூறும் கருத்தாக இருக்கிறது. அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி இன்று பல இயற்கை விவசாயிகள் முன்மாதிரி விவசாயிகளாக வலம் வருகிறார்கள். நானும் அதில் ஒருவராக இருப்பது பெருமையே! இதேபோல் பல விவசாயிகள் முன்வர வேண்டும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிர்களை சாகுபடி செய்வதோடு, அவற்றை பரவலாக்கமும் செய்ய வேண்டும்’’ என அழைப்பு விடுக்கும் பாஸ்கரை நாம் வாழ்த்தி விடைபெற்றோம்.

தொடர்புக்கு: பாஸ்கர்: 94435 73530.

இலங்கை ரகம்

பாஸ்கரின் வயலில் நீலச்சம்பா பயிர்கள் மனிதர்களை மறைக்கும் அளவிற்கு எட்டடி வரை வளர்ந்து எட்டிப் பார்க்கிறது. அரிய வகையான கீரிச்சம்பா, முத்து சம்பா போன்ற தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகங்களையும், குலதெய்வங்களுக்காக முன்னோர்கள் படைக்கும் பச்சைப் பெருமாள் போக்கு, கோவிந்தா போக்கு போன்ற பல்வேறு நெல்ரகங்களும் இந்த வயலில் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள பிச்சைவாரி, கை வரச்சம்பா, துளைன் பாச், ராம அல்லி, வார்டன் சம்பா, வாலன் சம்பா, இலங்கையில் பயிரிடப்படும் கோரா, வெள்ளைக் கவுனி, சிவப்புக்கவுனி உள்ளிட்ட பயிர்களும் இங்கு பயிரிடப்பட்டு பரவலாக்கம் செய்யப்படுகின்றன.