Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி மாவட்டத்தில் நெற்பயிரை காப்பாற்ற மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை

* நிர்வாகம் கவனிக்குமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நெற்பயிரை காப்பற்ற மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் விடவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பப் பூ சாகுபடி பணிகள் முடிந்து இருக்கிறது. இந்தநிலையில் நல்லூர், தேரூர் ஆகிய பகுதிகளில் அறுவடை பணி தொடங்கி உள்ளது. பறக்கை, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 10 நாட்களில அறுவடை பணி தொடங்கும். ஆனால் அனந்தனார், தோவாளை, பத்மநாபபுரம் புத்தனார், நாஞ்சில் புத்தனார் உள்ளிட்ட சானல்களை நம்பி பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் என்பது மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும்.

இதனால் நெற்பயிரை காப்பாற்ற மார்ச் மாதம் இறுதி வரை தண்ணீர் தேவையாக இருந்து வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு, பிப்ரவரி 28ம் தேதி அடைக்கப்படும். இந்த வருடம் அணையை பிப்ரவரி 28ம் தேதி அடைத்தால், தாமதமாக பயிரிடப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கவலை ெதரிவித்து உள்ளனர். இது தொடர்பாக முன்னோடி விவசாயிகள் ராதாகிருஷ்ணன், செண்பகசேகரபிள்ளை, தாமோதரன், ரவீந்திரன், ராக்கிசமுத்து, கருணாநிதி உள்ளிட்ேடார் நேற்று நீர்வாளத்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை இணை இயக்குநர் வாணி ஆகியோரை சந்தித்து மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியிருப்பதாவது: தோவாளை, அனந்தனார் சானல் உடைப்பு சரிசெய்யப்பட்டு கடந்த கன்னிப் பூ சாகுபடியின் போது தண்ணீர் வழங்க தாமதம் ஆகியது. கன்னிப்பூ சாகுபடி தாமதமானதை தொடர்ந்து கும்பப் பூ சாகுபடியும் தாமதமாக தொடங்கியது. சரியான நேரத்தில் சாகுபடி செய்திருந்தால், பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதம் தொடக்கத்தில் அறுவடை பணிகள் முடிந்து இருக்கும். காலதாமதத்தால், மார்ச், ஏப்ரல் மாதத்தில்தான் அறுவடை பணி நடக்க இருக்கிறது. இதனால் பிப்ரவரி 28ம் தேதி அணையை அடைக்காமல் நெற் பயிரை காப்பாற்ற மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் விடவேண்டும்.

நீர்வளத்துறை சார்பில் சானல்கள் தூர்வாருவது, பழுது பார்க்கும் பணிகள் மார்ச் 31ம் தேதிக்குள் தொடங்கும். பணிகள் தொடங்குவதற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், சுழற்சி முறையில் அனைத்து சானல்களிலும் மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும். அதேபோல் வேளாண்மை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, எந்த பகுதியில் சாகுபடி செய்துள்ள பயிருக்கு தண்ணீர் வேண்டும் என்பதை நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வரும் மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் வழங்குவதற்கு போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.

குத்தகைதாரர் பெயரில் அடங்கல்

குமரி மாவட்டத்தில் தற்போது ஒரு சில இடங்களில் கும்பப் பூ அறுவடை பணி தொடங்கியுள்ளது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் பறக்கை, தேரூர், தாழக்கடி, செண்பராமன்புதூர், திட்டுவிளை, கடுக்கரை, புத்தளம் ஆகிய பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் நெல் ரூ.2500க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குமரியில் பெரும்பாலும் விவசாயிகள் குத்தகை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் கொண்டு செல்லும்போது அடங்கல் கேட்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் குத்தகைதாரர் பெயரில் அடங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு சில கிராம நிர்வாக அதிகாரிகள் குத்தகைதாரர் பெயரில் அடங்கல் வழங்காமல் உள்ளனர். இதனால் அடங்கல் கிடைக்காத குத்தகைதாரர்கள் வெளி மார்க்கெட்டில் நெல் கொடுத்து வருகின்றர். தற்போது ஒரு கோட்டை நெல் ரூ.1600க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர். குமரியில் உள்ள அனைத்து குத்தகைதாரர்களும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொண்டு கொடுக்கும் வகையில் கிராம நிர்வாக அதிகாரிகள் அடங்கல் வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கவேண்டும். என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.